

தீபாவளித் திருநாளில் தீவிரவாதத்தை தீயிட்டு முழுமையாய் ஒழிப்போம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்: "தீபத்திருவிழா என்று வணங்கப்படும் தீபாவளித் திருநாள் நாடெங்கும் மகிழ்ச்சியோடு கொண்டாடப்படுகிறது. ஆவளி என்றால் வரிசை என்று பொருள்படும்.
எனவே இல்லங்களில் தீபங்களை வரிசையாக அலங்கரித்து வைத்து ஆன்மீக உணர்வோடு ஆண்டுக்கு ஒருநாள் அனைவரையும் குதூகலிக்க வைக்கும் பண்டிகை இது.
ஒரு மதம் சார்ந்த பண்டிகை என்றாலும் எல்லா மதத்தினரும், இனத்தினரும் இணைந்து கொண்டாடும் தீபாவளித் திருநாளில் தீவிரவாதத்தை தீயிட்டு முழுமையாய் ஒழிப்போம்.
நாட்டிலுள்ள அனைவர் மத்தியிலும் நல்லிணக்கம், மகிழ்ச்சி, சமாதானம், ஒருமைப்பாட்டு உணர்வுகள் மேம்பட ஒற்றுமையாய் உழைப்போம் என்று சபதமேற்போம்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.