Published : 19 Feb 2017 02:54 PM
Last Updated : 19 Feb 2017 02:54 PM

அதிகாரப் போட்டியில் அதிமுகவும், திமுகவும் நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன: விஜயகாந்த் குற்றச்சாட்டு

பதவிக்காகவும், ஆட்சிக்காவும் அதிகாரப் போட்டியில் அதிமுகவும், திமுகவும் தனது நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், '' சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகளை காணும் போது அவை அனைத்தும் சட்டப்பேரவை மரபுகளை முற்றிலும் மறந்து நடைபெற்ற செயல்களாகவே உள்ளது. பதவிக்காகவும், ஆட்சிக்காவும் அதிகாரப் போட்டியில் அதிமுகவும், திமுகவும் தனது நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன என்பது இந்த நிகழ்வுகளில் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

ஆட்சிக்கு வந்ததும் திடீரென பால் விலை உயர்வு, பேருந்து பயண கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை தேர்தல் அறிக்கையில் கூறாமல், பின் ஏன் உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்று தேமுதிக எதிர்க்கட்சியாக இருந்தபோது சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, மக்கள் பிரச்சினைக்காக கேள்வி எழுப்பிய தேமுதிக உறுப்பினர்கள் அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதையும், அவையில் இருந்து அகற்றப்பட்ட நிகழ்வுகளையும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

ஆனால், தற்போது நடந்த நிகழ்வுகளை பார்க்கும் போது கட்சி பிளவுப்பட்டு இருக்கின்ற வேளையில், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள அதிமுகவினரும், திமுகவை பொறுத்தவரை அதிமுகவின் இந்த நிலையை பயன்படுத்தி, சந்தடி சாக்கில் உள்ளே புகுந்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக சட்டப்பேரவையில் நடந்த குழப்பத்தை பயன்படுத்த முயன்றது தெளிவாக அத்தனை மக்களுக்கும் புரிந்துள்ளது.

பேரவை தலைவர் தான் தாக்கப்பட்டதாகவும், தன் சட்டை கிழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கிறார். ஆனால், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியே வந்து பத்திரிகையாளர் மத்தியில், தனது சட்டை கிழிக்கப்பட்டதாக சபாநாயகர் நீலிக்கண்ணீர் வடிப்பதாகக் கூறுகிறார். தனது சட்டையை தானே அவிழ்த்து விட்டதோடு, பத்திரிகையாளர்களை அழைத்து நடந்த சம்பவங்களை தெரிவிப்பது போன்ற ஒரு நாடகத்தை கட்டவிழ்த்துள்ளார் மு.க.ஸ்டாலின்.

எப்படியாவது ஆட்சியை கலைத்து தனது கனவை நிறைவேற்றிக்கொள்ள ஸ்டாலின் திட்டமிட்டு அரங்கேற்றிய நாடகம் இது. அவரது கனவு பலிக்காததால், யார் மீதாவது பழியை போட்டுவிட்டு ஆதாயம் தேடவேண்டும் என்று நினைக்கிறார். இரு கட்சிகளும் நடத்தும் நாடகங்களை வாக்களித்த தமிழக மக்கள், அனைத்தையும் கவனித்து கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் கொடுத்துள்ள அதிகாரத்தை பயன்படுத்தி மக்களுக்கு நன்மை செய்ய முடியுமா என்பதைத் தான் ஆட்சியாளர்கள் பார்க்க வேண்டும். சபாநாயகரை பேசவிடாமல் திமுகவினர் தடுப்பது, மைக்கை பிடுங்கி அவரிடம் நீட்டி பேசு பேசு என அராஜகத்தில் ஈடுபடுவது, கையை பிடித்து இழுப்பது, சட்டையை கிழிப்பது போன்ற சட்டமன்ற நிகழ்வுகளை பார்க்கும்போது திமுக என்றாலே தில்லுமுல்லு கட்சி என என்றாகிவிட்டது.

பேரவைத் தலைவர், உறுப்பினர்களால் செயல்படவிடாமல் தடுக்கப்பட்டுள்ளார். கட்சிகளுக்கும் ஜாதி பேதங்களுக்கு அப்பாற்பட்டு நடுநிலையோடு செயல்பட வேண்டிய சட்டப்பேரவை தலைவர், சாதியை முன்னிறுத்தி பேசி இருப்பது கண்டனத்துக்குரியது. இரண்டு கட்சிகளையும் மக்கள் புறக்கணிக்க தயாராகி விட்டார்கள்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x