Published : 08 Mar 2014 12:00 AM
Last Updated : 08 Mar 2014 12:00 AM

துறைமுக செயல் திட்டங்களுக்காக 4 ஆண்டுகளில் ரூ.42,953 கோடி முதலீடு: மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன்

கடந்த 4 ஆண்டுகளில் துறைமுக செயல் திட்டங்களுக்காக ரூ.42,953 கோடி முதலீட்டிலான 88 புதிய செயல் திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுக பொறுப்புக் கழகத்தில் மத்திய கப்பல் போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு திட்டங்கள் தொடங்கப்பட்டன. மும்பையில் நடந்த விழாவில், கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு நேரு துறைமுகத்துக்காக 330 மீட்டர் பிரத்யேக சரக்குப் பெட்டக முனையம், 4-வது சரக்குப் பெட்டக முனையம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார். மும்பை துறைமுக செயல்பாடுகளுக்கான மென்பொருள் ஒருங்கிணைப்பு மேம்பாடு, தரம் உயர்த்தும் திட்டத்தையும் அறிமுகம் செய்தார்.

பின்னர் ஜி.கே.வாசன் பேசியதாவது:

சர்வதேச வர்த்தகத்தை எளிதாக்குவதில் பெரிய துறைமுகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. கடல்சார் துறையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக ஏராளமான நடவடிக்கைளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. துறைமுகங்களில் வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள அதிக முதலீடு தேவைப்படுகிறது. 1996-ம்

ஆண்டு முதல் துறைமுகத் துறையில் முதலீடுகளை ஈர்க்க, பொதுத்துறை மற்றும் தனியார் துறை கூட்டு திட்டத்தை அரசு நல்ல வழிமுறையாகப் பின்பற்றி வருகிறது.

துறைமுகத் துறையில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.42,953 கோடி முதலீட்டிலான 88 புதிய செயல் திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பெரிய துறைமுகங்களில் பொதுத்துறை, தனியார் துறை கூட்டுப் பங்கேற்புடன் 36 முனையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் 34 முனையங்கள் கட்டுமானத்தில் உள்ளன. 30 செயல் திட்டங்களை இந்த ஆண்டில் வழங்கியுள்ளோம். எனவே, பெரிய துறைமுகங்களில் மட்டும் பொதுத்துறை, தனியார் துறை கூட்டு பங்கேற்பில் சுமார் 100 செயல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.

இந்த ஆண்டு, கப்பல்துறை அமைச்சகத்துக்கு தனிச் சிறப்புமிக்க ஆண்டாக உள்ளது. பிரதமர் அலுவலகத்தால் நிர்ணயிக்கப்பட்ட 30 செயல் திட்டங்கள் இலக்கை நாம் அடைந்து விட்டோம். இந்த 30 செயல்திட்டங்களுக்கான ரூ.21 ஆயிரம் கோடி முதலீட்டில் நாம் அடையக்கூடிய கூடுதல் செயல்திறன் 217 மில்லியன் டன் ஆகும். துறைமுகத் துறையின் வரலாற்றிலேயே இது தனிச்சிறப்புமிக்க சாதனையாகும்.

இவ்வாறு வாசன் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் கப்பல் துறை இணை அமைச்சர் மிலிந்த் தேவ்ரா, கப்பல் துறை அமைச்சக செயலாளர் விஸ்வபதி திரிவேதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x