

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் கட்டப்படும் ரயில்வே மேம்பாலத்தை பொதுமக்களுக்கு இடையூறு இன்றி கட்டப்பட வேண்டும் என்று கடந்த 8-ம் தேதி சேலம் மக்கள் குழுவினர் போராட்டம் நடத்தியுள்ளனர். ஜனநாயக முறையில் தங்களது கோரிக்கைகளை வெளிப்படுத்தும் விதத்தில் போராடியது தவறுஅல்ல.
போராட்டம் நடத்தியவர்களில் மூவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இருவர் நீதிமன்றத்தின் மூலம் ஜாமீனில் வந்துள்ளனர். மற்றொருவரான சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷை ஜாமீனில் விடுவதற்கு அரசு தரப்பில் கடும் ஆட்சேபனை செய்த காரணத்தால் நீதிமன்றம் ஜாமீனில் விடவில்லை. அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அது மட்டுமின்றி மத்திய சிறைச் சாலையில் அவரை கட்டி வைத்து 30-க்கும் மேற்பட்ட சிறைக்காவலர்கள் கொடுமையான முறையில் தாக்கியுள்ளதாக, அவரது மனைவி மோனிகா தெரிவித்துள்ளார்.
இத்தகைய செயல் மனித உரிமையை மீறிய செயலாகும். இத்தகைய நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதுடன், அவரை ஜாமீனில் விடுவதற்கும், அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.