சசிகலா முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாது: செங்கோட்டையன்

சசிகலா முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாது: செங்கோட்டையன்
Updated on
1 min read

அதிமுக எஃகு கோட்டை. சசிகலா முதல்வர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் நிர்வாகிகள் பண்ருட்டி ராமச்சந்திரன், செங்கோட்டையன் ஆகியோர் கூட்டாகப் பேட்டி அளித்தனர்.

அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியதாவது:

''ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக கட்டுப்பாட்டுடன் இயங்கி வருகிறது. தேவையில்லாமல் வேண்டுமென்றே சிலர் வதந்திகளை பரப்புகின்றனர். மக்களிடம் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

பி.ஹெச்.பாண்டியன் சொன்ன கருத்துகள் உண்மைக்கு மாறானவை. சசிகலா முதல்வராக வேண்டும் என்ற எண்ணத்தில் அதிமுகவினரும், நிர்வாகிகளும் இயங்கி வருகின்றனர். ஆட்சிப் பொறுப்பை ஏற்பதாக சசிகலா கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து பரிசோதித்த மருத்துவர்கள் அளிக்கும் விளக்கத்தை நம்ப வேண்டும் ' என்றார்.

செங்கோட்டையன் பேசியதாவது:

''ஓர் இயக்கம் சிந்தாமல், சிதறாமல் இயங்க வேண்டுமென்றால் அதற்கு அமைதி காப்பது அவசியம். பதவி பெரிதா, கட்சி பெரிதா என்று பார்த்தால் கட்சிதான் பெரிது.

முன்னாள் சட்டப்பேரவை தலைவர் பி.எச்.பாண்டியன் சில கருத்துகளைக் கூறியுள்ளார். அதற்குரிய விளக்கம் தர வேண்டியது எங்கள் கடமை.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிரிந்தது. அப்போது ஜானகி ராமச்சந்திரன் முதல்வராகி 23 நாட்கள் பதவியில் இருந்தார். அதற்குப் பிறகு இரண்டாகப் பிரிந்த அதிமுக மீண்டும் இணைந்தது. ஆனால், முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்க அதிமுக நிர்வாகிகள் முயற்சி செய்தோம். அப்போது பி.எச்.பாண்டியன் முடக்கப்பட்ட சின்னத்தைப் பெறுவதற்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை.அவர் சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை.

திருநாவுக்கரசர் அணியிலே பி.எச்.பாண்டியன் செயல்பட்டார். திமுக ஆதரவுடன் தேர்தலில் போட்டியிட்டார்.

ஜெயலலிதா மீது வழக்கு தொடுக்கக் காரணமாக இருந்தவர் பி.எச்.பாண்டியன். உச்ச நீதிமன்றம் வரை சென்று ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு தேவையில்லை என்றார். இவர் தற்போது குழப்பத்தை விளைவிக்கும் கும்பலோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

அதிமுக எஃகு கோட்டை. ஆட்சிக் கட்டிலில் சசிகலா அமர்வதை யாராலும் தடுக்க முடியாது'' என்று செங்கோட்டையன் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in