Published : 20 Sep 2013 06:19 PM
Last Updated : 20 Sep 2013 06:19 PM

குமரியை விட்டுக் கைமாறும் ரப்பர் தொழிற்சாலை

மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், மதுரையில் விரைவில் ரப்பர் தொழிற்சாலை அமைக்க இருப்பதாக தெரிவித்தார். குமரி மாவட்ட ரப்பர் விவசாயிகளின் பல ஆண்டு கோரிக்கையான இத்திட்டம், நீண்ட காலமாக நிறைவேறாத நிலையில், மதுரைக்கு இடம்பெயர்வது, குமரியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தில், குமரி மாவட்டத்தில்தான் அதிகளவில் ரப்பர் சாகுபடி நடக்கிறது. மாவட்டத்தின் மேற்குப் பகுதியான கல்குளம், விளவங்கோடு தாலுகாக்களில், நாற்பதாயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் ரப்பர் பயிரை நம்பியே இருக்கின்றன. ரப்பர் தோட்டங்களை சொந்தமாக வைத்திருப்பவர்கள் போக, ரப்பர் பால் வெட்டும் தொழிலையும் நம்பி ஏராளமானவர்கள் உள்ளனர். இங்கு ரப்பர் தொழிற்சாலை தேவை என விவசாயிகளும், ரப்பர் தொழிலாளர்களும் நீண்ட காலமாகவே கோரி வந்தனர். இந்நிலையில், ரப்பர் சாகுபடியே இல்லாத மதுரை மாவட்டத்தில், ரப்பர் தொழிற்சாலை அமைக்க இருக்கும் தகவல், குமரி மாவட்ட விவசாயிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இவ்விவகாரம் பற்றி பேசிய முன்னாள் எம்.பி. பெல்லர்மின், குமரி மாவட்டத்தில்தான் தரமான ரப்பர் விளைகிறது. இங்கு ரப்பருக்கான ஆராய்ச்சி மையம் தேவை என்பது, 40 ஆண்டுகால கனவாகும். 2004ம் ஆண்டு, ஜோதி நிர்மலா ஆட்சியராக இருந்த போது, குமரி மாவட்டத்தில் ரப்பர் ஆராய்ச்சி மையம் அமைக்க, தக்கலையை அடுத்த வேலிமலை பகுதியில் 230 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. குமரி மாவட்டத்தில் ரப்பர் தொழிற்சாலையின் அவசியம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசினேன். அதற்கு மத்திய அரசின் சார்பில், குமரி மாவட்டத்தில் நேரடியாக ரப்பர் தொழிற்சாலை தொடங்கும் எண்ணம் இல்லை. மாநில அரசு தொடங்க முன் வந்தால் ஒத்துழைப்பு கொடுப்போம் என்று கூறினர். அப்போதைய தி.மு.க. அரசு ரப்பர் தொழிற்சாலை என்கிற விஷயத்தை, சில மாற்றங்கள் செய்து ரப்பர் பூங்கா தொடங்குவதாக அறிவித்தது. நாகர்கோவில் அருகில் உள்ள செண்பகராமன்புதூர் கிராமத்தில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதுவும் இன்று வரை கிடப்பில் கிடக்கிறது.

குமரி மாவட்டத்தில் 35 சதவீத மக்கள், ரப்பர் தொழிலை சார்ந்தே உள்ளனர். குமரி மாவட்ட மக்கள் நாற்பது ஆண்டுகளாக ரப்பர் தொழிற்சாலை கனவில் இருக்கும்போது, மதுரையில் ரப்பர் தொழிற்சாலை அமைத்தால் போராட்டத்தை முன்னெடுப்போம் என்றார்.

ஏற்கெனவே தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டத்துக்கு எதிராக போராடி வரும் குமரி மாவட்ட ரப்பர் விவசாயிகளும், ரப்பர் தோட்ட தொழிலாளர்களும் அமைச்சர் அறிவிப்பால் விரக்தியடைந்துள்ளனர்.

ஜவ்வாக இழுக்கும் ரப்பர் ஆலை

நடவுக்குத் தேவையான ரப்பர் நாற்றுகள் குமரியில் இருந்துதான், இந்தியா முழுவதுக்கும் செல்கிறது. ஆனால், ரப்பர் பயிருக்கு நோய்த் தாக்குதல் ஏற்பட்டால் கூட, விவசாயிக்கு தீர்வு சொல்ல, இங்கு ஆராய்ச்சி மையம் இல்லை.

ரப்பர் தொழிற்சாலைக்கு நிலம் கையகப்படுத்தி அதுவும் கிடப்பில் கிடக்கிறது.

கடந்த தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்ட ரப்பர் பூங்கா திட்டமும் காணாமல் போயுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x