

கன்னியாகுமரி மாவட்ட அதிமுக.வில் நிலவும் கோஷ்டி பூசல் காரணமாக கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.தமிழக அளவில் தேசியக் கட்சிகள் வலுவாக இருக்கும் மாவட்டம் கன்னியாகுமரி. மக்களவைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் 37 தொகுதிகளை கைப்பற்றிய அதிமுக.வுக்கு கன்னியாகுமரி தொகுதியில் மூன்றாவது இடமே கிடைத்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுக பலவீனமாக இருப்பதை உணர்ந்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா, நீண்டகாலமாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த தளவாய் சுந்தரத்துக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கினார். மேற்கு மாவட்ட செயலாளராக ஜெங்கின்ஸ் நியமிக்கப்பட்டார். கட்சிக்கு வாடகை அலுவலகம் கூட இல்லாமல் அரசு விருந்தினர் மாளிகையில் அதிமுகவினர் சந்தித்து வந்தனர். புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டதும் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தனித்தனியே அலுவலகம் திறக்கப்பட்டது.
கட்சிப் பணிகள் மும்முரமாக நடைபெற்றன. தினசரி மாற்றுக் கட்சியில் இருந்து குறைந்தபட்சம் ஒரு கவுன்சிலராவது இணையும் வைபவம் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட அதிமுக பெயரில் மின்னஞ்சல், முகநூல் பக்கம் என மிளிரியது.
இந்நிலையில் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா கைது செய்யப்பட்ட நிலையில், கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் தினம் ஒரு போராட்டம் நடைபெற்று வருகிறது. இவ்வேளையில்தான், கட்சியில் திடீரென கோஷ்டி பூசல் எட்டிப்பார்க்க தொடங்கியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நாகர்கோவிலில் உண்ணாவிரதப் பந்தலில், முன்னாள் அமைச்சர் பச்சைமால் ஆதரவாளரான ஜெகதீஸ் என்பவருக்கும், தளவாய் சுந்தரம் ஆதரவாளர்களுக்கும் இடையே திடீர் வாய்த்தகராறு ஏற்பட்டது. இலைமறை காயாக இருந்த கோஷ்டி பூசல் வெடித்தது. இதன் எதிரொலியாக, திங்கள்கிழமை நடைபெற்ற கன்னியாகுமரி முதல் நாகர்கோவில் வரையான மனிதச் சங்கிலி போராட்டம் பிசுபிசுத்துப் போனது. ஆங்காங்கே நகர்ப்பகுதியிலும், முக்கிய சந்திப்புகளிலும் மட்டும் கட்சியினர் கைகோத்து நின்றனர்.
இக்கட்டான நிலையில் கட்சி இருக்கும் வேளையில், கன்னியாகுமரியில் கட்சியினரின் போதிய ஒத்துழைப்பின்றி போராட்டம் பிசுபிசுப்பது தொண்டர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.