Published : 22 Oct 2013 10:20 AM
Last Updated : 22 Oct 2013 10:20 AM

சாதி, மத அமைப்புகளின் நிகழ்ச்சிகளை முழுமையாக தடை செய்ய முடியாது - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

சாதி, மத அமைப்புகளின் நிகழ்ச்சிகளை முழுமையாக தடை செய்வது சாத்தியமில்லாதது என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது.

இந்திய மக்கள் மன்றத்தின் நிறுவனத் தலைவர் வராகி பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர், “இந்தியாவில் சாதி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காக நமது தேசத் தலைவர்கள் பலர் பாடுபட்டனர். ஒவ்வொரு ஆண்டும் சாதி அடிப்படையிலான குரு பூஜைகள், பேரணிகள் நடப்பதற்கு முன்னும், பின்னும் சாதிக் கலவரங்களும் அதிக அளவில் நடக்கின்றன. கடந்த 2010 முதல் 2012-ம் ஆண்டு வரையிலான மூன்று ஆண்டுகளில் மட்டும் சாதிக் கலவரங்கள் காரணமாக 29 பேர் உயிரிழந்துள்ளனர். 336 பேர் காயமடைந்துள்ளனர். சுமார் ரூ.1 கோடியே 98 லட்சம் மதிப்புள்ள பொது சொத்துகள் சேதமடைந்துள்ளன. 368 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆகவே, இனி சாதி ரீதியிலான பேரணிகள், குரு பூஜைகளை அரசு தடை செய்ய வேண்டும் என்று கோரி கடந்த 3.9.2013 அன்று தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பினேன். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று வராகி தனது மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஏற்கெனவே 11.9.2013 அன்று பரமக்குடியில் நடந்த தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளின்போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாத வகையில் அரசு பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இதனால் அந்த நிகழ்ச்சி அமைதியாக நடந்து முடிந்தது.

இது தவிர ஏற்கெனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு இரண்டு மாத காலத்துக்கு அமலில் உள்ளது. தேவர் குரு பூஜை வரை இந்த தடை நீடிக்கும்.

நிகழ்ச்சிகளை முழுமையாக தடை செய்வது என்பது இயலாதது. அது நடைமுறை சாத்தியமற்றதும் ஆகும். அதே நேரத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கத் தேவையான அளவுக்கு கட்டுப்பாடுகளும், நிபந்தனைகளும் இதுபோன்ற நிகழ்ச்சிகளின்போது விதிக் கப்படும். தேவையான எண்ணிக் கையில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அரசின் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x