

வழக்கறிஞர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''வழக்கறிஞர்கள் சட்டத் திருத்தம் என்பது வழக்கறிஞர்களின் சுதந்திரத்துக்கும், ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானது எனக் கூறி அவர்கள் போராடி வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் நீதிமன்றப் பணிகள் முடங்கியுள்ளன. இதனால் வழக்குகளை எதிர்கொண்டுள்ள அனைத்துப் பிரிவு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்றங்கள் முடங்கியுள்ளதால் கைதானவர்கள் ஜாமீன் பெற முடியாமல் சிறையில் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் இல்லாமலேயே சில நீதிமன்றங்கள் வழக்குகளை நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளதால் பலரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் 126 வழக்கறிஞர்களை அகில இந்திய பார் கவுன்சில் இடைநீக்கம் செய்துள்ளது. இதனைக் கண்டித்து வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வழக்கறிஞர்களும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு தனது மவுனத்தை கலைந்து தீர்வு காண வேண்டும்.
வழக்கறிஞர்கள் கூட்டு நடவடிக்கை குழுவிடம் பேச்சு நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசும் இப்பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண முன்வர வேண்டும்'' என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.