

வழக்கறிஞர்கள் சட்டத்திருத்தத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் வழக்கறிஞர்களுக்கு சிஐடியு ஆதரவளிக்கும் என்று அதன் தலைவர் அ.சவுந்திரராசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்திரராசன் மற்றும் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், ''வழக்கறிஞர்கள் சட்டத்தில் சென்னை உயர் நீதிமன்றம் கொண்டு வந்துள்ள திருத்தத்தை எதிர்த்து போராட்டங்களை நடத்தி வரும் வழக்கறிஞர்களுக்கு சிஐடியு தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.
நீதிமன்றத்துக்குள் வழக்கறிஞர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு ஏற்கெனவே சட்டம் உள்ளது. இந்நிலையில் அதில் மேலும் திருத்தங்களை கொண்டு வருவது வழக்கறிஞர்களின் உரிமைகளையும், சுதந்திரத்தையும் கேள்விக்குறியாக்குவதாகவும்.
புதிய சட்டத்திருத்தத்தை அமல்படுத்தினால், விருப்பு வெறுப்பின் அடிப்படையில் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுத்திடும் ஆபத்து உள்ளது. வழக்கறிஞர்கள் மீது அடக்குமுறை விதிகளை ஏவுவது பெருமை சேர்க்காது. எனவே, இப்பிரச்சினை குறித்து வழக்கறிஞர்களை அழைத்து பேசி சென்னை உயர் நீதிமன்றம் உரிய தீர்வை ஏற்படுத்த வேண்டும்'' என்று தெரிவித்துள்ளனர்.