Published : 16 Mar 2017 11:17 AM
Last Updated : 16 Mar 2017 11:17 AM

கேரள அட்டப்பாடி பகுதியில் 6 அணைகள் கட்டும் பகுதியில் பலத்த மழை: வெள்ளம் வந்ததால் பவானியை கண்டுகொள்ளாத விவசாயிகள்

கேரள மாநிலம் அட்டப்பாடி பகுதியில் பவானி ஆற்றின் குறுக்கே 6 தடுப்பணைக் கட்டும் பணியில் கேரள அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் விவசா யம் பாதிக்கப்படுவதுடன், குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் எனப் புகார் தெரிவித்து, அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

அட்டப்பாடி பகுதியில் ஒரு அணை கட்டப்பட்டு, 2-வது அணை யின் கட்டுமானப் பணிகள் தொடங் கிய நிலையிலேயே, சாவடியூர் உள்ளிட்ட பகுதிகள் வறண்டன. இதனால் அங்குள்ள விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து, பவானி, சிறுவாணி ஆற்றில் பாசனத்துக்காக தண்ணீர் எடுக்க மின் மோட்டார்களைப் பயன் படுத்தக்கூடாது என்று வாய்மொழி யாக அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர். இது விவசாயிகளை மேலும் கோபப்படுத்தியது.

இதையடுத்து, 6 அணைகள் உரு வாகும் பகுதியில் உள்ள விவசாயி கள், பவானியில் முறைவைத்து பாசனம் நடத்துவது என்று தங்களுக்குள் ஆலோசனை நடத்தி, முடிவு செய்தனர். மாவட்ட நிர்வாகம் அனுமதிக்காத நிலையிலும், தங்களுக்குள்ளாகவே தண்ணீர்ப் பங்கீடு செய்துகொள்ளும் நடைமுறையைப் பின்பற்றினர். இதில் குளறுபடிகள் ஏற்பட்டதால், முறைப்பாசனத்தில் திருத்தம் செய்தனர்.

இதன்படி, ஞாயிற்றுக்கிழமை அணைகட்டும் பகுதியில் உள்ளவர் கள் மோட்டாரைப் பயன்படுத்தி தண்ணீரை எடுப்பதில்லை என்றும், மற்ற நாட்களில் மேல்பகுதி, கீழ்பகுதி விவசாயிகள் ஒருநாள் விட்டு ஒருநாள் மோட்டார் மூலமாக தண்ணீர் எடுக்கவும் முடிவு செய் தனர். இது தொடர்பாக பஞ்சாயத்து மூலமாக ஆட்டோ, டெம்போக்களில் பிரச்சாரம் செய்யப்பட்டது. மேலும், தண்டோரா மூலமாகவும் இதுகுறித்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இந்தப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை கனமழை பெய்தது. எனவே, ஆற்றில் மட்டுமின்றி, ஆற்றங்கரையோரம் உள்ள விவசாயிகளின் தோட்டங்களிலும் தண்ணீர் தேங்கியது. இதனால், இப்பகுதி விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, நேற்று முழுவதும் பவானியிலிருந்தோ, அதை அடுத்துள்ள சிறுவாணியிலிருந்தோ மோட்டார் மூலமாக தண்ணீரை உறிஞ்சவில்லை.

இதுகுறித்து தேக்குவட்டை, மஞ்சிக்கண்டி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் கூறியதாவது: அட்டப்பாடி பகுதியில் மழை பெய்து 6 மாதத்துக்கு மேலாகிவிட்டது. எதிர்பார்த்த அளவுக்கு பருவ மழை பெய்யவில்லை. அதனால் கடும் வறட்சி நிலவியது.

பொதுவாக, கோடையில் வறட்சி நிலவும்போது விவசாயிகள் ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை வைத்து, மோட்டார் மூலமாக தண்ணீரை எடுப்பர். இது தொடர்பாக பிரச்சினைகள் ஏற்படும். தற்போது புதிதாக அணையும் கட்டப்பட்டுள்ளதால், தண்ணீர்ப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. முறைப்பாசனம் கடைப்பிடிக்கப்பட்டாலும், அனைத்து விவசாயிகளும் அதை நடைமுறைப்படுத்தாமல், ஒற்றுமையின்றி செயல்பட்டனர். கோடையை எப்படி சமாளிப்பது என்று திகைத்து இருந்த நிலையில், தற்போது அதிக மழை பெய்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இதனால் 2 நாட்களுக்கு தோட்டத்துக்கு நீர் பாய்ச்ச வேண்டிய தேவை இருக்காது. எனவே, மோட்டார்களை பயன்படுத்தவில்லை. பஞ்சாயத்து மூலமாக செய்யப்படவிருந்த அறிவிப்பும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

மழை காரணமாக மேட்டுப்பாளையம் பவானியிலும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, “பருவ மழை பொய்த்ததால் வரலாறு காணாத வகையில் பவானி நதி வறண்டது. இதனால், அதை நம்பியுள்ள குடிநீர்த் திட்டங்களும், விவசாயமும் கேள்விக்குறியானது. இந்த நிலையில், கேரள அரசு தடுப்பணைகளைக் கட்டத் தொடங்கியதால் நிலைமை மேலும் சிக்கலுக்குள்ளானது.

தற்போது பெய்துள்ள மழையால், பவானி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேட்டுப்பாளையம் பகுதிகளில் உள்ள மலைத் தொடர்களிலும் பலத்த மழை பெய்ததால், ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. கோடைமழை இன்னும் சில தினங்களுக்குத் தொடர்ந்தால், பில்லூர் மற்றும் பவானிசாகர் அணைகளின் நீர் இருப்பும் அதிகரிக்கும். இதனால் கோடைகாலத்தில் ஏற்படும் தண்ணீர்த் தட்டுப்பாடை ஓரளவு சமாளிக்க இயலும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x