Published : 27 Jan 2014 12:00 AM
Last Updated : 27 Jan 2014 12:00 AM

காங்கிரஸையும் சேர்த்தால் திமுக கூட்டணிக்குத் தயார்: மமக நிர்வாகிகளிடம் விஜயகாந்த் விதித்த நிபந்தனை!

காங்கிரஸையும் சேர்த்தால் திமுக கூட்டணிக்கு வரச் சம்மதம் என மனிதநேய மக்கள் கட்சித் தூதுவர்களிடம் விஜயகாந்த் சொல்லி அனுப்பியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தேமுதிக-வை திமுக கூட்டணியில் சேர்ப்பதற்கு மமக தலைவர் ஜவாஹிருல்லா தீவிர முயற்சி எடுத்து வருகிறார். அண்மையில் மலேசியாவில், மமக பொதுச்செயலாளர் தமீம் அன்சாரி, இணைப் பொதுச் செயலாளர் ஹாரூண் ரஷீத், அமைப்புச் செயலாளர் நாசர் ஆகி யோர் விஜயகாந்தை சந்தித்துப் பேசினர். இரண்டு மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில், காங்கிரஸையும் சேர்த்தால் திமுக கூட்டணிக்கு தயார் என விஜயகாந்த் தெரிவித்ததாகச் சொல்கிறார்கள்.

பாஜக கூட்டணி இல்லை

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய மமக வட்டாரத்தினர், ’’பாஜக கூட்டணிக்கு விஜயகாந்த் வருவார் என்று சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் விஜய காந்த் பாஜக கூட்டணியை விரும்பவில்லை, மலேசியாவில் எங்கள் நிர்வாகிகளிடம் பேசும்போது, ’நாமெல்லாம் அண்ணன் தம்பிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும்போது ராமருக்கு கோயில் கட்டுவது ஒரு பெரிய பிரச்சினையா?’ன்னு கேட்டிருக்கிறார். எனவே, அவர் பாஜக அணிக்கு போவதற்கு சாத்தியம் இல்லை.

காங்கிரஸுடன் வந்தால் கூட்டணிக்கு தயார்

அதேசமயம், ’தேமுதிக இடம் பெறும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருக்க வேண்டும். எனவே, காங்கிரஸையும் திமுக கூட்டணியில் சேர்க்கும்படி கலைஞரிடம் சொல்லுங்கள். காங்கிரஸுடன் சேர்ந்து வந்தால் நாங்களும் அந்தக் கூட்டணிக்கு தயார்’ என்று சொல்லி இருக்கிறார் விஜயகாந்த்.

காங்கிரஸுக்கும் அவருக்கும் ஏதோ உடன்படிக்கை இருப்பது தெரிகிறது. அதேசமயம், கலைஞரே தன்னுடன் நேரடியாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் அவர் விரும்பு கிறார்’’ என்று சொன்னார்கள்.

பொறுத்திருந்து பாருங்கள் - ஜவாஹிருல்லா

இதுகுறித்து மமக தலைவர் ஜவாஹிருல்லாவிடம் கேட்டதற்கு, ’’எங்கள் பிரதிநிதிகளை ‘எல்லோ ரும் ஒன்றாய் இருப்போம்’ என்று உத்தரவாதம் கொடுத்து வழி யனுப்பி இருக்கிறார் விஜய காந்த். ஆகையால், அவர் திமுக கூட்டணிக்கு வருவது நிச்சயம்.

முடிவை பொறுத்திருந்து பாருங்கள்’’என்று சொன்னவர், ’’மதிமுக-வுக்கு நல்ல எதிர்காலம் வரும்போதெல்லாம் தவறான முடிவுகளை எடுத்து கட்சியை அதலபாதாளத்தில் தள்ளுவதில் வல்லவராய் இருக்கிறார் வைகோ. இப்போதும் பாஜக-வுடன் கூட்டணி வைத்து மதிமுக-வின் கடைசி அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்.

போக்கிடமில்லாமல் போகிறார் வைகோ

இலங்கை தமிழர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் மோடி பிரதமரானால்தான் விடிவு என்கி றார். வாஜ்பாய் ஆறு ஆண்டுகள் பிரதமராக இருந்த போது நடந்தவைகளை மறைத்துப் பேசுகிறார் வைகோ.

ஆனையிரவு முற்றுகையின் போது சந்திரிகா அரசுக்கு ஆதரவாகத்தானே இருந்தார் வாஜ்பாய். பாஜக ஆட்சியில் தமிழக மீனவர்கள் தாக்கப்பட வில்லையா? தமிழக மீனவர்களின் 88 படகுகளை இலங்கை நாட்டுடமை ஆக்கியது வாஜ்பாய் காலத்தில்தான்.

அந்தப் படகுகளுக்கு இந்த ஆட்சியில்தான் இழப்பீடு வழங்கி இருக்கிறார்கள்.

வாஜ்பாயைவிட திறமையா னவரா மோடி? எனவே, தனக்கு போக்கிடம் இல்லை என்று சொல்லிவிட்டு வைகோ பாஜக பின்னால் போகட்டும். அதை விடுத்து, மோடி தமிழர்களுக்கு நல்லது செய்வார் என்று மாயத் தோற்றத்தை உருவாக்க வேண்டாம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x