

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு சேகரிப்பில் உள்ளூர் பிரமுகர்களை களமிறக்க பாஜக தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் பாஜக சார்பில் திரைப்பட இயக்குநர் கங்கை அமரன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இடைத்தேர்தலை சந்திப்பது மற்றும் தேர்தல் பிரச்சாரம் குறித்து, பாஜக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் தண்டையார்பேட்டை யில் நேற்று நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு பாஜக வேட்பாளர் கங்கை அமரன், மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.
தனித்தனி குழுக்கள்
அதில், பாஜகவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ள நிலையில் பிரச்சாரத்துக்கு பல்வேறு தனித்தனி குழுக்களை உருவாக்க வேண்டும். திங்கள்கிழமை முதல் தினமும் காலை 6 மணியிலிருந்து இரவு வரை பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதி மக்களையும் நேரில் சந்தித்து பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க வேண்டும். இந்த பணியில் உள்ளூர் பிரமுகர்களை அதிக அளவில் ஈடுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர் கங்கை அமரன் நிருபர்களிடம் கூறும்போது, “தினமும் காலை 6 மணியிலிருந்து பிரச்சாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளோம். மதிய நேரத்தை தவிர்த்து, மாலை மற்றும் இரவில் அனுமதிக்கப்பட்ட நேரம் வரை பிரச்சாரத்தில் ஈடுபட இருக்கிறோம்” என்றார்.
ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் பிரச்சாரம் குறித்து, பாஜக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் தண்டையார்பேட்டையில் நேற்று நடைபெற்றது. பாஜக வேட்பாளர் கங்கை அமரன், மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.