

கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், அத்தொகுதி உறுப்பினன் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) நேரடியாக சென்று பார்வையிட்டார்.
இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையினால் பாதிப்புக்குள்ளான கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளை, திமுக பொருளாளரும், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான மு.க.ஸ்டாலின் இன்று (24-10-2014) நேரடியாக சென்று பார்வையிட்டார்.
முழங்கால் அளவு மழை நீரில் நடந்தே சென்று பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார். கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட 68வது வட்டத்தில் கே.கே.ஆர். அவென்யூ, ஸ்டேட் பாங்க் காலனி, மதுரைசாமி மடம் - 64வது வட்டத்தில் சிவசக்தி நகர், சிவசக்தி நகர் விரிவு, மகாத்மா காந்தி நகர் - 65ஆவது வட்டத்தில் விவேகானந்தா சாலை, கிருஷ்ணா நகர், பூபதி நகர் போன்ற பகுதிகளுக்கு நேரடியாக சென்று, மழையினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அவருடன் முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், வடசென்னை மாவட்டப் பொறுப்பாளர் ஆர்.டி.சேகர், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் ப.ரங்கநாதன்,பி.கே.சேகர்பாபு மற்றும் இரா.கிரிராஜன், பகுதி பொறுப்பாளர் ஐசிஎப் முரளிதரன் ஆகியோர் உடனிருந்தனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.