Published : 17 Aug 2016 07:56 AM
Last Updated : 17 Aug 2016 07:56 AM

சேலம் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் 5.5 கிலோ தங்க நகைகள் கொள்ளை: ஜன்னல் கம்பியை அறுத்து கைவரிசை

சேலம் அருகே தனியார் நிதி நிறுவனத்தின் ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், சுமார் 5.5 கிலோ (690 பவுன்) நகை மற்றும் ரூ.1.35 லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்த கெங்கவல்லி வீரகனூர் மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் முதல் தளத்தில் தனியாருக்கு சொந்தமான நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு மேலாளராக உளிபுரத்தைச் சேர்ந்த முருகேசன்(32) உட்பட மொத்தம் 5 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 13-ம் தேதி மாலை நிறுவனத்தை ஊழியர்கள் பூட்டிச் சென்றனர். நேற்று காலை 8.50 மணிக்கு முருகேசன் நிதி நிறுவனத்தை திறந்து உள்ளே சென்றார்.

அப்போது, அடகு நகைகள் வைக்கப்பட்டிருந்த ‘ஸ்ட்ராங் ரூம்’ பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரிந்தது. அதிர்ச்சியடைந்த அவர், கெங்கவல்லி காவல் நிலையத்தில் புகார் செய்தார். தகவல் அறிந்த டிஐஜி நாகராஜன், எஸ்பி ராஜன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

நிதி நிறுவனம் செயல்படும் கட்டிடத்தின் பின்புறம் உள்ள இரும்பு ஜன்னல் கம்பியை அறுத்து, கொள்ளையர்கள் உள்ளே புகுந்து ‘ஸ்ட்ராங் ரூம்’ மற்றும் பீரோவை கள்ளச்சாவியை பயன்படுத்தி திறந்து அதில் இருந்த 5.5 கிலோ தங்கம் மற்றும் 1 லட்சத்து 35 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றது தெரிந்தது. 20 பவுன் நகையை மட்டும் விட்டுச் சென்றுள்ளனர்.

சம்பவ இடத்தில் குற்ற வாளிகளின் கைரேகைள் பதிவு செய்யப்பட்டன. போலீஸ் மோப்ப நாய் மேகா, நிதி நிறுவனத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள இந்திரா நகர் வரை ஓடிச் சென்று நின்றது. ஆத்தூர் டிஎஸ்பி நமச்சிவாயம், கெங்கவல்லி இன்ஸ்பெக்டர் (பொ) கண்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

பாதுகாப்பில் அலட்சியம்

கொள்ளை நடந்த நிதி நிறுவனத்தில் நுழைவு வாயில் மற்றும் ‘ஸ்ட்ராங் ரூம்’ அருகே பொருத்தப்பட்டுள்ள 2 கண்காணிப்பு கேமராக்கள் கடந்த 2 மாதங்களாக பழுதடைந்துள்ளன. இரவு நேர காவல் பணிக்கும் காவலர் இல்லை. 2 நாட்கள் விடுமுறை, பாதுகாப்பு குறைபாடு ஆகிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளை சம்பவம் நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், ‘ஸ்ட்ராங் ரூம்’ மற்றும் பீரோவை உடைக்காமல், கள்ளச்சாவி உபயோகப்படுத்தப் பட்டுள் ளதால், நன்கு அறிமுகமான நபர்களின் உடந்தையுடன் கொள்ளை சம்பவம் நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x