Published : 08 Dec 2013 12:00 AM
Last Updated : 08 Dec 2013 12:00 AM

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கூண்டோடு மாற்றம்

தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கூண்டோடு மாற்றப்பட்டு, புதிய நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிகாரப்பூர்வ பட்டியலை சனிக்கிழமை மாலை, டெல்லியில் கட்சி மேலிடம் அறிவித்தது. தமிழக காங்கிரஸ் தலைவராக பி.எஸ்.ஞானதேசிகன் நீடிப்பார் என அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவேதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒப்புதலின்படி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக பி.எஸ்.ஞானதேசிகன் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளார். பொருளாளராக கோவைத் தங்கம் நியமிக்கப்படுகிறார்.

செயற்குழு நிர்வாகிகளாக 43 பேரும், துணைத் தலைவர்களாக 17 பேரும், பொதுச் செயலாளர்களாக 29 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். 54 மாவட்டத் தலைவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செயற்குழு நிர்வாகிகள் பட்டியலில் பி.எஸ்.ஞானதேசிகன், மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன், சுதர்சன நாச்சியப்பன், மூத்த தலைவர்கள் எஸ்.ஜி.விநாயகமூர்த்தி, கே.பாரமலை, ஜி.ஆர்.மூப்பனார், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், முன்னாள் மாநில தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, குமரி அனந்தன், எம்.கிருஷ்ணசாமி, தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கோபிநாத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இதுதவிர ஆர்.பிரபு, மணிசங்கர் அய்யர், ஜெயக்குமார், திருநாவுக்கரசர், டாக்டர் செல்லகுமார், தனுஷ்கோடி ஆதித்தன், எம்.பி.க்கள் என்.எஸ்.வி.சித்தன், ஹாரூண் ரஷீத், ராமசுப்பு, விஸ்வநாதன், கே.எஸ்.அழகிரி, மாணிக்கம் தாகூர் மற்றும் எஸ்.கே.கார்வேந்தன், ராணி வெங்கடேசன், யசோதா, பீட்டர் அல்போன்ஸ், அன்பரசு, ஜி.ஏ.வடிவேல், வள்ளல்பெருமான், அப்துல் காதர், கே.ஆர்.ராமசாமி, உலகநம்பி, ராணி, ஜி.எஸ்.தானாபதி, கிருஷ்ணசாமி வாண்டையார், மகேஸ்வரி, வாமனன், நஞ்சப்பன், எல்.முத்துக்குமார் ஆகியோரும் செயற்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

நிர்வாகிகள் நியமனம் குறித்து காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:

இந்த மாற்றத்துக்கு ஒப்புதல் அளித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கும் மாற்றத்துக்கு ஒத்துழைப்பு கொடுத்த தமிழகத் தலைவர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். செயலாளர்கள் பட்டியல் இன்னும் ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும். புதிய நிர்வாகிகள் ஒத்துழைப்புடன் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் முதலிடத்தை பிடிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x