Published : 14 Apr 2017 09:47 AM
Last Updated : 14 Apr 2017 09:47 AM

ஒரு வாரத்தில் ஆய்வக உதவியாளர் தெரிவு பட்டியல் வெளியீடு: பள்ளிக்கல்வி இயக்குநர் தகவல்

ஆய்வக உதவியாளர் பணிக்கு தேர்வுசெய்யப்பட்டோர் பட்டியல் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. “ஒரு காலியிடத்துக்கு 5 பேர்” என்ற விகிதாச்சார அடிப்படையில் ஏறத்தாழ 22 ஆயிரம் பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்டனர்.

சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை நீங்கலாக மற்ற அனைத்து மாவட்டங்களிலும் ஏப்ரல் 9, 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. (தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த காரணத்தால் சென்னை மாவட்டத்தில் மட்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படவில்லை). சான்றிதழ் சரிபார்ப்பின்போது, அசல் கல்விச் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், பணி அனுபவச் சான்றிதழ் ஆகியவை சரிபார்க்கப்பட்டு, வெயிட்டேஜ் மதிப்பெண் அளிக்கப்பட்டது.

சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்த உடனேயே தெரிவு பட்டியல் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. சான்றிதழ் சரிபார்ப்பு செவ்வாய்க்கிழமை முடிவடைந்துவிட்டதால் தெரிவு பட்டியல் எப்போது வெளியிடப்படும் என்று விண்ணப்பதாரர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் கூறியதாவது:

ஆய்வக உதவியாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கப்பட்டு கட் ஆப் மதிப்பெண் தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்பணி முடிவடைந்ததும் மாவட்ட வாரியான தெரிவு பட்டியல் அந்தந்த முதன்மைக் கல்வி அதிகாரிகளால் வெளியிடப்படும். தெரிவு பட்டியல் வெளியான அடுத்த சில தினங்களில் மாவட்ட கல்வி அதிகாரிகளால் கலந்தாய்வு மூலம் பணி நியமன ஆணை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x