

தங்கள் அமைப்பு தடை செய்யப்பட்டதற்காக சென்னை ஐஐடி டீன் மன்னிப்பு கேட்பதோடு, தடையையும் நீக்க வேண்டும் என அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தின் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் அம்பேத்கர் - பெரியார் வாசிப்பு வட்டம் என்ற பெயரில் ஒரு குழு செயல்பட்டது. அந்த குழுவின் உறுப்பினர்கள் மத்திய அரசு, பிரதமர் மோடியை விமர்சித்து பிரச்சாரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாணவர் அமைப்பை சென்னை ஐஐடி நிர்வாகம் அண்மையில் தடை செய்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு அலைகள் எழுந்துள்ளது.
இந்நிலையில், இன்று சென்னை ஐஐடி வளகாத்துக்குள் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐஐடி நிர்வாகத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
தங்கள் அமைப்பு தடை செய்யப்பட்டதற்காக சென்னை ஐஐடி டீன் மன்னிப்பு கேட்பதோடு, தடையையும் நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
ஐஐடி வளாகத்துக்குள் போராட்டம் நடைபெற்றதால் அது குறித்த செய்தி சேகரிக்க செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.
இதனிடையே, ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி, சம்பந்தப்பட்ட மாணவர் அமைப்பிடம் விளக்கம் மட்டுமே கோரப்பட்டது என்று புதிய விளக்கம் அளித்தது கவனிக்கத்தக்கது. | அதன் விவரம்:>அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்துக்கு தடை விதிக்கவில்லை: ஐ.ஐ.டி. இயக்குநர் புதிய விளக்கம் |