

‘பீப்’ பாடல் விவகாரம் தொடர்பான விசாரணைக்கு சிம்பு, அனிருத் இருவரும் மார்ச் 21-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொங்கு நாடு அருந்ததியர் முன்னேற்றப் பேரவை அமைப் பின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் இளங்கோவன் ஜன.4-ம் தேதி கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், இந்திய தண்டனைச் சட்டம் 292 பிரிவு, தகவல் தொழில்நுட்பச் சட்டம் 67 ஆகியவற்றின்படி, பெண்களை தவறாக சித்தரித்துள்ள சிம்பு, அனிருத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையில், இளங்கோவன் உள்ளிட்டோரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு அடுத்தகட்ட விசாரணை ஜன.19 க்கு ஒத்திவைக் கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த வழக்கு மாஜிஸ்திரேட் ராஜ் குமார் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், மார்ச் 21-ம் தேதி சிம்பு, அனிருத் இருவரும் ஆஜராக வேண்டுமென சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.