7 ஆண்டுகளாக வழங்கப்படாத கலைமாமணி விருதுகளை தகுதியான கலைஞர்களுக்கு வழங்க வேண்டும்: நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் வலியுறுத்தல்

7 ஆண்டுகளாக வழங்கப்படாத கலைமாமணி விருதுகளை தகுதியான கலைஞர்களுக்கு வழங்க வேண்டும்: நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் வலியுறுத்தல்
Updated on
1 min read

தமிழக நாட்டுப்புற இசைக் கலைப் பெருமன்றம் சார்பில் நாட்டுப்புற இசைக் கலைப் பெருவிழா மற்றும் மாநில மாநாடு தஞ்சாவூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. முன்னதாக, நாட்டுப்புற இசைக் கலைஞர்களின் பேரணி தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா அருகிலிருந்து தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாக பனகல் கட்டிடம் எதிரில் நிறைவடைந்தது.

பின்னர், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்கு பெருமன்றத் தலைவர் சின்னப்பொண்ணு தலைமை வகித்தார். மாநாட்டில், அருகிவரும் அனைத்து கிராமியக் கலைகளையும் இளம் தலைமுறையினருக்கு பயிற்றுவிக்கும் பயிற்சிப் பள்ளி நடத்த அரசு உதவ வேண்டும். நாட்டுப்புறக் கலைஞர்களின் வாரிசுகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். கடந்த 7 ஆண்டு களாக வழங்கப்படாத கலை மாமணி விருதுகளை தகுதியான கலைஞர்களுக்கு வழங்க வேண்டும்.

கலைமாமணி தேர்வுக் குழு மற்றும் அரசு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தில் வயது மற்றும் அனுபவம் அடிப்படையில் மன்றம் பரிந்துரைக்கும் கலைஞர்களை உறுப்பினராக தேர்வு செய்ய, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் ஏற்க வேண்டும். 58 வயது நிறைந்த கலைஞர்களுக்கு ஓய்வூதியம் என்பதில் திருத்தம் செய்து, பெண் கலைஞர்களுக்கு 45 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

தகுதியுள்ள கலைஞர்களுக்கு சுழற்சி முறையில் இயல் இசை நாடக மன்றம், தென்னகப் பண்பாட்டு மைய கலை நிகழ்ச்சிகளில் பாரபட்சம் இன்றி வாய்ப்புகள் வழங்க வேண்டும். சொந்த வீடு இல்லாத நாட்டுப்புற கலைஞர்களுக்கு அரசு குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். நாட்டுப்புற கலைக் குழுக்களுக்கு தொழில் மேம்பாட்டுக்காக மானியத் துடன் கூடிய கடன் வழங்க வேண்டும். அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நாட்டுப்புற இசை மற்றும் மரபுவழி நாட்டுப்புறக் கலைகளை பயிற்றுவிக்க தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்களாக நியமனம் செய்ய வேண்டும். மரபு வழி நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளை நடத்துபவர்களுக்கு அரசின் வழிகாட்டுதல்படி காவல் துறை உரிய ஒத்துழைப்பும், ஊர்தோறும் கலைநிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான விதிகளை தளர்த்தி, கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் அனுமதி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து, இசைக் கலைப் பெருவிழாவில், நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புலியாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

தென்னக பண்பாட்டு மைய இயக்குநர் இ.என்.சஜீத், தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறை துணை இயக்குநர் இரா.குணசேகரன், திரைப்பட இசையமைப்பாளர்கள் கணேஷ், தாஜ்நூர், நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குடி கருப்பாயி, பாடகர்கள் வேல்முருகன், அந்தோனிதாஸ், தஞ்சாவூர் பாரத் கல்வி குழுமச் செயலாளர் புனிதா கணேசன், டாக்டர் ராதிகா மைக்கேல் மற்றும் இசைக் கலைஞர்கள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in