

திருப்பத்தூரில் நூற்றாண்டை கடந்த அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிதிலமடைந்த கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், மாணவர்களின் உயிருக்கு ஆபத்து நேரிடும் அபாயம் இருப்பதாக பெற்றோர் அஞ்சுகின்றனர்.
இது குறித்து பெற்றோர் கூறிய தாவது :
வேலூர் மாவட்டம் திருப்பத் தூரில் கடந்த 1856-ம் ஆண்டு ‘தாலுகா பாடசாலை’ என்ற பெயரில் பள்ளி தொடங்கப்பட்டது. திருப்பத்தூர் தாலுகாவில் தொடங் கப்பட்ட முதல் பள்ளி என்ற பெருமையைப் பெற்ற இப்பள்ளி, 1860-ம் ஆண்டு ‘அரசினர் ஆங்கிலம் - தாய்மொழி பாடசாலை’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இதையடுத்து, 1886-ம் ஆண்டு திருப்பத்தூர் மூன்றாம் நிலை நகராட்சியாக அந்தஸ்து பெற்றது. இதைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட இப்பள்ளி திருப்பத்தூர் நகராட்சி இடைநிலைப் பள்ளியாக தரம் உயர்ந்தது. அதன்பிறகு, 1891-ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக உருவெடுத்த இப் பள்ளியில் அன்றைய காலகட்டத் திலேயே நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர்.
இவ்வாறு படிப்படியாக தரம் உயர்த்தப்பட்ட திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மீனாட்சி திரையரங்கம் எதிரே இன்று வரை செயல்பட்டு வருகிறது. பல்லாயிரக்கணக்கான அரசு உயர் அதிகாரிகள்,மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள் தொழிலதிபர்கள் என உருவாக்கிய இப்பள்ளியில், தற்போது மாணவர்கள் ஆபத்தான நிலையில் கல்வி பயின்று வருகின்றனர்.
நூற்றாண்டை கடந்த பள்ளி என்பதால், இங்குள்ள கட்டிடங்கள் சிதிலமடைந்து, மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்தன. புதிய கட்டிடம் கட்டவேண்டும் என பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்ததால், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. தற்போது இந்த கட்டிடத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் படித்து வருகின்றனர். இதற்கிடையே, சிதிலமடைந்த கட்டிடத்தை அகற்ற பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், பள்ளி வளாகத்தில் உள்ள பழைய கட்டிடங்கள் அவ்வப்போது இடிந்து விழுந்தும் மேற்கூரை பெயர்ந்தும் வருகிறது. பள்ளி விளையாட்டு மைதானம் அருகேயுள்ள வகுப்பறை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தானாகவே இடிந்து விழுந்தது. இதையடுத்து, பழமை வாய்ந்த கட்டிடங்களை முழுவதுமாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்ட பழைய வகுப்பறை கட்டிடங்களில் செங்கல், சிமென்ட் சிலாப்புகள், மண் அகற்றாமல் உள்ளதால், மாணவர்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
அதேபோல், விளையாட்டுத் திடல் அருகேயுள்ள பழைய கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதனருகே மாணவர்கள் விளையாடும் போது விபரீதம் நேரிட்டால் மாணவர்களின் நிலை பரிதாபத்துக்குள்ளாகிவிடும். எனவே, மாணவர்கள் நலன் கருதி, பழமை வாய்ந்த கட்டிடங்களை முழுவதுமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் வரலட்சுமியிடம் கேட்டபோது, “மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடாது என்பதற்காகவே பழைய கட்டிடங்கள் கோடை விடுமுறையில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. பொதுப் பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட இப்பணி பள்ளி தொடங்கப்பட்டதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பள்ளி விடுமுறை நாட்களில் பழைய கட்டிடத்தை அகற்றும் பணி நடந்து வருகிறது. இதுவரை 90 சதவீதம் பணி முடிந்துள்ளது. மீதமுள்ள பணியை முடிக்க பொதுப்பணித்துறை பொறியாளர்கள், ஒப்பந்ததாரர் களிடம் வலியுறுத்தி வருகிறோம். பழைய கட்டிடம் இருக்கும் இடத்துக்கு மாணவர்கள் செல்லக் கூடாது என்பதை கவனத்துடன் கண்காணித்து வருவதால், மாணவர்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பில்லை. இருப்பினும், விரைவில் பழைய கட்டிடங்களை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்