

வருங்கால வைப்பு நிதி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சவீதா கல்லூரி உட்பட 18 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
7 பேர் கைது
சென்னையில் உள்ள சவீதா கல்வி குழுமம் தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் களுக்கு செலுத்த வேண்டிய வருங்கால வைப்பு நிதி தொகையை செலுத்தாமல் கோடிக் கணக்கில் முறைகேடு செய் துள்ளது என்று சிபிஐ அதிகாரி களுக்கு புகார்கள் வந்தன. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தியது. அதைத் தொடர்ந்து தங்களது கல்வி நிறுவனத்துக்கு சாதகமாக செயல்படுவதற்காக வருங்கால வைப்புநிதி ஆணையர் துர்காபிரசாத், வைப்புநிதி அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ஏழுமலை, மணிகண்டன் ஆகியோருக்கு சவீதா கல்வி குழும அதிகாரிகள் லஞ்சம் கொடுக்க முயன்றனர்.
நேற்று முன்தினம் லஞ்சப் பணத்தை கொடுத்தபோது சிபிஐ அதிகாரிகள் சுற்றி வளைத்து அனைவரையும் கைது செய்தனர். வருங்கால வைப்புநிதி ஆணையர் துர்காபிரசாத், வைப்புநிதி அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ஏழுமலை, மணிகண்டன், லஞ்சப் பணத்தை கொடுக்க ஏற்பாடு செய்த சவீதா கல்வி குழுமத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி செங்கோட்டையன், அவரது கார் ஓட்டுநர் ராஜா, லஞ்சப் பணத்தை கொடுத்த வழக்கறிஞர்கள் சுடலைமுத்து, சூரியநாராயணன் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைதான 7 பேரும் சிபிஐ நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வருகிற 1-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
18 இடங்களில் சோதனை
7 பேர் கைதானதை தொடர்ந்து, அவர்களின் அலுவலகங்கள், வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சவீதா கல்லூரி, வருங்கால வைப்பு நிதி அலுவலகம், கைதானவர்களின் வீடுகள் என சென்னையில் 18 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ரகசிய சோதனை நடத்தி, பல ஆவணங்களை கைப்பற்றி உள்ள னர். அந்த ஆவணங்களை ஆய்வு செய்து வழக்குக்கு ஆதார மாக கிடைக்கும் தகவல்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.