

முள்ளிவாய்க்கால் முற்றம் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பழ. நெடுமாறன் உள்பட 81 பேருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் இறந்த தமிழர்களின் நினைவாக தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது. ஆனால், நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் சுற்றுச்சுவர் மற்றும் பூங்கா அமைக்கப்பட்டதாக தமிழக அரசு கூறியது. எனவே, கடந்த 13-ம் தேதி சுற்றுச்சுவர் மற்றும் பூங்கா இடிக்கப்பட்டது.
மேலும், நெடுஞ்சாலைத் துறை சொத்துகளை சேதப்படுத்தியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட வழக்குகள் பழ. நெடுமாறன் உள்ளிட்ட 83 பேர் மீது பதிவு செய்யப்பட்டன. 81 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றத்தில் இவர்கள் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். ஆனால், மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே, இவர்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதி செல்வம் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் வழக்குரைஞர் சந்திரசேகர் ஆஜரானார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பழ.நெடுமாறன் உள்ளிட்ட 81 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.