

கடல்சார் வணிகத்தில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பாரம்பரியம் கொண்ட இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள வளர்ச்சி போதுமானது அல்ல என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார்.
இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தர் வி.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் 1339 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
பல்வேறு துறைகளில் முதலிடம் பெற்ற 10 மாணவ, மாணவிகளுக்கு குடியரசுத் தலைவர் தங்கப் பதக்கம் வழங்கி பாராட்டினார். இந்த விழாவில் அவர் பேசியதாவது.
கடல்சார் தொழிலில் இந்தியாவுக்கு மிகப் பழமையும், பாரம்பரியமும் கொண்ட வரலாறு உள்ளது. கி.மு. 3 ஆயிரம் ஆண்டுகளிலேயே சிந்துச் சமவெளி நாகரிக மக்கள் கடல்சார் வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். கி.மு. 200 - கி.பி. 1,200-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பர்மா, மலேசியா, தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் போன்ற நாடுகளுடன் கடல் வழி வியாபாரத்தால் கிழக்கு மற்றும் தென்னிந்திய மன்னர்கள் தொடர்பு கொண்டிருந்தனர். இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதி மக்களுக்கும் அரேபியா, எகிப்து உள்ளிட்ட நாடுகளுக்கும் இடையே வணிக தொடர்பு இருந்திருக்கிறது. 11-ம் நூற்றாண்டில் தமிழக மன்னன் ராஜேந்திர சோழன் மிகப் பெரும் கப்பல் படையை வைத்திருந்தார்.
இவ்வளவு பாரம்பரியம் கொண்ட இந்தியாவுக்கு தற்போது 7 ஆயிரத்து 500 கி.மீ. நீளம் கொண்ட மிக நீண்ட கடற்கரை உள்ளது. இந்தியாவின் மொத்த வணிகத்தில் 95 சதவீத சரக்குப் போக்குவரத்து கடல் மார்க்கமாகவே நடைபெறுகிறது. எனினும், இந்த சரக்குகளை கையாள்வதில் இந்திய கப்பல்களின் எண்ணிக்கை வெறும் 10 சதவீதம் மட்டுமே. உலகின் மொத்த மாலுமிகளில் இந்தியர்களின் பங்களிப்பு வெறும் 6 சதவீதம் மட்டுமே. இது போதாது. இந்தியா பொருளாதாரத்தில் மிகப் பெரும் வளர்ச்சி அடைந்த நாடாக மாற வேண்டுமானால், கடல்சார் வணிகத்தில் நமது பங்களிப்பு பெருக வேண்டும். உலக மாலுமிகளில் 6 சதவீதமாக உள்ள இந்திய மாலுமிகளின் எண்ணிக்கை 2015-ம் ஆண்டுக்குள் 9 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும்.
இந்த சூழலில் கடல்சார் தொழில்நுட்ப வல்லுநர்களை நாட்டுக்கு அளிப்பதில் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பணி செய்து வருகிறது.
இவ்வாறி பிரணாப் முகர்ஜி பேசினார்.
விழாவில் சிறப்புரையாற்றிய மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன், “நாட்டின் வர்த்தக மேம்பாட்டுக்கு வணிகக் கப்பல்களின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மாறி வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ஏராளமான மாலுமிகளை உருவாக்கும் வகையில் நாடு முழுவதும் அதிக அளவில் கடல்சார் கல்வி நிலையங்களை தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்று கூறினார்.
விழாவில் மாநில ஆளுநர் கே.ரோசய்யா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். முன்னதாக பல்கலைக்கழக துணைவேந்தர் கே.அசோக் வர்தன் ஷெட்டி வரவேற்று பேசினார்.