

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நடிப்பில் 1965 ம் ஆண்டு வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் நவீன தொழில்நுட்ப வசதிகளால் மெருகூட்டப்பட்டு இன்று தமிழகமெங்கும் 110க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.
படத்தை வெளியிடும் திவ்யா பிலிம்ஸ் உரிமையாளர் சொக்கலிங்கம் இதுபற்றி கூறியதாவது:-
மிகவும் சேதமடைந்த ‘பிக்சர் நெகட்டிவ்’ மற்றும் ‘சவுன்ட் நெகட்டிவ்’களை எடுத்து கடந்த இரண்டு வருட காலமாக அதனை சீர் செய்யும் முயற்சியில் இறங்கினோம். ‘ரெஸ்டோரஷன்’ ‘டிஐ, கலர் கரெக் ஷன், ஆகிய வேலைகளை செய்து முடிந்த வரை இன்றைய கால தரத்திற்கு ஏற்ற வகையில் சினிமாஸ்கோப்பில் வடிவமைத்துள்ளோம்.
அடுத்தபடியாக ‘சவுன்ட் நெகட்டிவ்’வை சரி செய்யும் முயற்சியில் இன்றைய கால கட்ட இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் ‘மோனோ சவுன்ட் சிஸ்டம்’ ஆக இருந்த ‘சவுன்ட் நெகட்டிவ்’ வை ‘டிடிஎஸ்’ - 5. 1 தொழில்நுட்பத்திற்கு நவீனப்படுத்தியுள்ளோம்.
இந்தப்படத்திற்கு பின்னால் இருந்த ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞர்களையும் கவுரவிக்கும் வகையில் ‘டைட்டில் கார்டு’ வரும் போது அவர்களின் பெயரோடு புகைப்படமும் இடம்பெற செய்யப்பட்டுள்ளது. ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப்படம் தமிழகம் மட்டுமில்லாமல் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட இடங்களிலும் ரிலீஸ் ஆகிறது. குறிப்பாக சென்னையில் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் முதல் 5 நாட்களுக்கு அனைத்து டிக்கெட்களும் விற்பனையாகி உள்ளது
இவ்வாறு அவர் கூறினார்.