Published : 10 Jan 2014 07:51 PM
Last Updated : 10 Jan 2014 07:51 PM

நெல்லை, குமரி, தூத்துக்குடியில் கடும் மழை: குற்றாலம், திற்பரப்பில் குளிக்கத் தடை



திருநெல்வேலி, தூத்துக் குடி, கன்னியாகுமரி மாவட்ட ங்களில் பரவலாக பெய்த மழையால், குற்றால அருவிக ளில் வியாழக்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

தொடர் மழை

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, திருநெல்வேலி மாவட்டத்தில், தொடர் மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமையும் மிதமான மழை நீடித்தது. காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாபநாசம் அணைப்பகுதியில் 180 மி.மீ. மழை பதிவானது. பிற அணைப்பகுதி, மற்ற இடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):

மணிமுத்தாறு - 120, கன்னடியன் அணை - 82, மூலக்கரைப்பட்டி - 82, நம்பியாறு - 81, களக்காடு - 64.8, ராதாபுரம் - 62, அம்பாசமுத்திரம் - 54.2, சேர்வலாறு - 51, சேரன்மகாதேவி - 44, கொடுமுடியாறு - 35, கடனாநதி - 18.6, பாளையங்கோட்டை - 16, திருநெல்வேலி - 5.1, ஆய்குடி - 3.2.

பாபநாசம் அணை நீர்மட்டம் 82.85 அடியிலிருந்து, 88 அடியாக உயர்ந்தது. 4,173 கனஅடி தண்ணீர் வரத்து இருந்தது. மணிமுத்தாறு அணைக்கு 4,077 கனஅடி தண்ணீர் வந்தது. நீர்மட்டம் 70.20 அடியிலிருந்து, 75.20 அடியாக உயர்ந்தது. சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடியும், கடனா நீர்மட்டம் 5 அடியும், ராமநதியில் 6 அடியும் உயர்ந்தது.

குளிக்கத்தடை

செங்கோட்டை, தென்காசியில் பரவலாக மழை பெய்தது. குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பிரதான அருவியில் வளைவைத் தாண்டி வெள்ளநீர் விழுந்ததால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

பழைய குற்றால அருவியிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. ஐந்தருவியில் அதிகளவில் தண்ணீர் விழுந்தது. ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகம் இருந்ததால், அருவியில் பாதுகாப்பான இடங்களில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

களக்காடு

களக்காடு பகுதியில் தொடர் மழை காரணமாக அங்குள்ள, நாங்குநேரி கால்வாய், பச்சையாறு மற்றும் உப்பாறு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சிதம்பராபுரம் பகுதியில் பாலத்தை தொட்டபடி வெள்ளநீர் கரைபுரண்டு ஓடி, ஊருக்குள் புகுந்தது.

நாங்குநேரி கால்வாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டதால், களக்காடு புதுத்தெரு, சர்ச் தெரு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது. பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை உருவானது. வெள்ளநீரை வடிய வைக்கும் பணியில் களக்காடு பேரூராட்சி நிர்வாகம் ஈடுபட்டது.

திற்பரப்பு ஆர்ப்பரிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில், 2வது நாளாக வியாழக்கிழமை சாரல் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக 76.2 மி.மீ. மழை பதிவானது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.

பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று காலை 21.35 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 130 கன அடி தண்ணீர் வருகிறது. பெருஞ்சாணி அணை நீர் மட்டம் 56 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 208 கன அடி தண்ணீர் வருகிறது.

மாம்பழத்துறையாறு அணை நிரம்பி வழிவதால், அணையிலிருந்து 16 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணை பொதுப்பணித்துறை அதிகாரிகளின் தொடர் கண்காணிப்பில் இருக்கிறது. கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. விசைப்படகுகள்,கட்டுமரங்கள் கடற்கரையில் நிறுத்தப்பட்டன.

பேச்சிப்பாறை 2, பெருஞ்சாணி 8.4, சிற்றாறு 1-ல் 7.4, சிற்றாறு 2-ல் 9.6, ஆரல்வாய்மொழி 38, மாம்பழத்துறையாறு 65, நாகர்கோவில் 51.2, பூதப்பாண்டி 36.2, கன்னிமார் 51.4, பாலமோர் 10.4, மயிலாடி 76.2, கொட்டாரம் 72.4, இரணியல் 27, ஆணைக் கிடங்கு 55, குளச்சல் 46, குருந்தன்கோடு 47.6, அடையாமடை 40, கோழிப்போர்விளை 38, திருவட்டாறு 48 மி.மீ. மழை பதிவானது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய மழை, புதன்கிழமையைத் தொடர்ந்து, வியாழக்கிழமை அதிகாலையும் நீடித்தது. இதனால், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து, மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் உத்தரவிட்டார்.

புயல் எச்சரிக்கை காரணமாக வியாழக்கிழமை மூன்றாவது நாளாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. 300 விசைப்படகுகள் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் ஓய்வெடுத்தன.

விவசாயிகள் மகிழ்ச்சி

பருவமழை பொய்தத்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் பயிரிடப்பட்ட உளுந்து, பாசிப்பயறு, மக்காச்சோளம் உள்ளிட்ட மானாவாரி பயிர்கள் கருகத் தொடங்கின. இந்நிலையில் பெய்த இந்த மழை விவசாயிகளை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x