Last Updated : 13 Oct, 2014 12:40 PM

 

Published : 13 Oct 2014 12:40 PM
Last Updated : 13 Oct 2014 12:40 PM

தீபாவளி பட்டாசு உற்பத்தி: சிவகாசி ஆலைகளில் மும்முரம்

சிவகாசி பகுதியிலுள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் இந்த ஆண்டுக்கான பட்டாசு உற்பத்திப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. உற்பத்தி முடிக்கப்பட்டு இம்மாதம் 18, 19-ம் தேதிகளில் அனைத்து பட்டாசு ஆலைகளும் அடைக்கப்படுகின்றன.

பட்டாசு உற்பத்தியில் தமிழகத்திலுள்ள சிவகாசி நாட்டிலேயே சிறப்பிடம் பிடித்து வருவது அனைவரும் அறிந்ததே. நம் நாட்டின் மொத்த பட்டாசு தேவையில் சுமார் 90 சதவீத பட்டாசு உற்பத்தி சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி சிவகாசி மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளிலுள்ள ஆலைகளில் பட்டாசு உற்பத்தி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு பட்டாசுத் தொழிற்சாலையிலும் தற்போது மத்தாப்பு தயாரிப்பு பணிகளே தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, விசில் போன்ற ஒலியெழுப்பும் பட்டாசு வகைகளும், வானில் சென்று வெடிக்கும்போது பல வண்ணங்களை உமிழ்ந்தபடி வெடித்துச் சிதறும் ‘மணி மருந்து’ வைக்கப்பட்ட பட்டாசு வகைகளே இந்த ஆண்டில் அதிகம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

தயாரித்து முடிக்கப்பட்ட பட்டாசு மற்றும் மத்தாப்பு ரகங்கள் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தினந்தோறும் மாலை நேரத்தில் சோதனைக்காக வெடித்துப் பார்க்கப்படுகின்றன. இதனால், அப்பகுதியில் எப்போதும் வாண வேடிக்கைதான். காண்போரை இது மெய்சிலிர்க்கச் செய்கிறது.

மேலும், தீபாவளி பண்டிகைக்காக இந்த ஆண்டு புது வரவு எதுவும் இல்லாதது பட்டாசுப் பிரியர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதுகுறித்து பட்டாசு ஆலை உரிமை யாளர்களிடம் கேட்டபோது, சீனப் பட்டாசு இறக்குமதியால் இந்த ஆண்டு விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தயாரித்து முடிக்கப் பட்ட பட்டாசுகள் ஏராளமாக தேக்க மடைந்துள்ளன. முழுமையாக விற் பனை இல்லாத நிலையில் ஒருசில மத்தாப்பு ரகங்களைத் தவிர புதிய ரகங்கள் ஏதும் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படவில்லை. இதற் காக பட்டாசு உற்பத்தியாளர்களும் ஆர்வம் காட்டவில்லை என்றனர்.

மேலும், பட்டாசு தயாரிப்புப் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தீபாவளி பண்டிகைக்கான உற்பத்தி முடிக்கப்பட்டு சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்துத் தொழிற்சாலைகளிலும் இம்மாதம் 18, 19 ஆகிய தேதிகளில் உற்பத்திப் பணிகள் முடிக்கப்பட்டு பல ஆலைகள் விடுமுறை அறிவித்து அடைக்கப்படும். பின்னர், ஒவ்வொரு ஆலையிலும் அதன் உற்பத்தித் திறனுக்கேற்ப ஒரு மாதமோ அல்லது 2 மாதங்கள் கழித்தோ பட்டாசுத் தொழிற்சாலைகள் வெள்ளையடிக்கப்பட்டு திறக்கப்பட்டு மீண்டும் அடுத்த ஆண்டுக்கான பட்டாசு உற்பத்தி தொடங்கப்படும் என்றனர்.

ஏ.டி.எம்.களில் பணம் இல்லை

சிவகாசியில் பட்டாசு வாங்குவதற்காக பல்வேறு வெளி மாவட்டங்களிலிருந்தும் தினமும் நூற்றுக்கணக்கானோர் சிவகாசிக்கு படையெடுத்த வண்ணம் இருக்கின்றனர். பட்டாசுக் கடைகள் நடத்தும் சில்லறை விற்பனையாளர்கள், சிறு நிறுவனத்தினர், உறவினர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு கொடுப்பதற்காக கிப்ட் பாக்ஸ் வாங்க வருவோர் என சிவகாசியில் ஏராளமானோர் குவிகின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர் பணம் எடுத்துவருவதில்லை. ஏ.டி.எம்.களில் பணம் எடுத்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் வருகின்றனர். தொடர்ந்து ஏராளமானோர் பணம் எடுப்பதால் சிவகாசியிலுள்ள பல ஏ.டி.எம்.களில் பணம் இருப்பதில்லை. இதனால் பட்டாசு வாங்க வருவோர் தவித்து வருவதோடு, திருத்தங்கல் அல்லது சாத்தூர் சென்று அங்குள்ள ஏ.டி.எம்.களில் பணம் எடுத்துவருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x