

நாளொன்றுக்கு மூன்று லட்சம் லிட்டர் குடிநீர் கூடுதலாக கிடைக்கும் வகையில் மேலும் ஓர் 'அம்மா குடிநீர் உற்பத்தி நிலையம்' அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதிய பணப் பயன்களை, சென்னையில் முதல்வர் ஜெயலலிதா இன்று வழங்கினார். அத்துடன், சென்னை மினி பஸ் சேவையை அவர் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசும்போது, “பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டும் அரசுப் போக்குவரத்துக் கழகங்களை பலவகைப்படுத்தும் நோக்கிலும், 'அம்மா குடிநீர்' திட்டம் என்னால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கும்மிடிப்பூண்டியில் உள்ள சாலைப் போக்குவரத்து நிறுவன வளாகத்தில் நாளொன்றுக்கு மூன்று லட்சம் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் 'அம்மா குடிநீர் உற்பத்தி நிலையம்' 15.9.2013 அன்று என்னால் துவக்கி வைக்கப்பட்டது.
இங்கு பெறப்படும் அதிக அளவு நீரினைக் கருத்தில் கொண்டு மேலும் ஓர் 'அம்மா குடிநீர் உற்பத்தி நிலையம்' அமைக்கப்படும் என்பதையும் இதன் மூலம், நாளொன்றுக்கு மூன்று லட்சம் லிட்டர் குடிநீர் கூடுதலாக கிடைக்கும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார் முதல்வர் ஜெயலலிதா.