Published : 03 Aug 2016 07:53 AM
Last Updated : 03 Aug 2016 07:53 AM

வேதகிரீஸ்வரர் கோயில் புஷ்கர மேளா திருவிழா: திருக்கழுக்குன்றத்தில் கோலாகலம் - லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ் வரர் கோயிலின் சங்கு தீர்த்தக் குளத்தில் அர்த்ததேவர் புனித நீராடும் நிகழ்ச்சியான புஷ்கர மேளா திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் திருக் கழுக்குன்றத்தில் பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் அமைந்துள்ளது. இந்த மலை யைச் சுற்றிலும் தவமிருந்த முனிவர் கள் மற்றும் தேவர்களுக்கு அருள் பாலிக்க சிவபெருமான் காட்சிய ளித்தபோது அகத்திய குளம், மூலிகைக் குளம், அக்னிக் குளம், லட்சுமி தீர்த்தம், சங்கு தீர்த்தம் உள்ளிட்ட 14 தீர்த்தக்குளங்கள் அமைந்ததாக ஐதீகம்.

இதில் பிரசித்தி பெற்ற சங்கு தீர்த்தக்குளம் மலைக்கோயிலின் தெற்கே 12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு, மார்க் கண்டேய முனிவர் சிவனை நோக் கித் தவமிருந்தபோது குளத்தில் சங்கு பிறந்ததாக பக்தர்கள் நம்புகின்றனர். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்தில் இன்றும் இயற்கையாகச் சங்கு பிறப் பதாகவும், நன்னீரில் சங்கு பிறப் பது அதிசயம் எனவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கன்னி ராசியில், குருபகவான் பிரவேசிக்கும் போது சங்கு தீர்த்த புஷ்கர மேளா எனப்படும் லட்ச தீப திருவிழா இந்தக் குளத்தில் வெகுவிமரிசையாக நடைபெறும். இந்நிலையில், நேற்று குருபகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியடைந்தார். இதை முன்னிட்டு, புஷ்கரமேளா திரு விழா நேற்று கோலாகலமாக நடை பெற்றது.

காலை 6.30 மணிக்கு திரிபுர சுந்தரி திருத்தேர் உற்சவம் நடந்தது. தொடர்ந்து, திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி இடப வாகனத்தில் எழுந்தருளினார். உற்சவர் முருகர், விநாயக பெரு மான் ஆகியோரும் மயில் மற்றும் மூஷிக வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

சன்னதி தெருவில் பஞ்சமூர்த் திகளும் ஊர்வலமாக சங்கு தீர்த்தக் குளக்கரையில் எழுந்த ருளினர். பின்னர், அர்த்ததேவர் எழுந்தருளினார். அங்கு, அர்த்த தேவருக்கு பால், சந்தனம், விபூதி, தேன் ஆகிய அபிஷேகங்கள் நடந்தன. குளக்கரையில் அமைக் கப்பட்டு இருந்த யாகசாலையில், 3 நாட்களாக சிவாச்சாரியர்கள் மூலம் பூஜைகள் செய்யப்பட்ட புனித கலசத்தின் நீர், அர்த்த தேவரின் மீது ஊற்றப்பட்டது.

பின்னர், புஷ்கரமேளாவின் முக்கிய நிகழ்வான சங்கு தீர்த்தக் குளத்தில் அர்த்ததேவர் புனித நீராடினார். அப்போது, பக்தர்கள் அரோகரா, அரோகரா என கோஷமிட்டு பக்தி பரவசத் துடன் சுவாமியை வழிபட்ட னார். பக்தர்கள் குளத்தில் நீராட அனுமதிக்கப்படவில்லை. போலீஸார் மூலம், குளத்தில் இருந்து தண்ணீரை வாலியில் எடுத்து பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

மாலை 6 மணிக்கு சங்கு தீர்த்தக்குளம், மலைக்கோயில், பக்தவச்சலேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அகல் விளக்குகளை ஏற்றி வழிபட்டனர். இரவு 9 மணிக்கு பக்தவச்சலேஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள ஆமை மண்டபத்தில், திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமல்லாது வட மாநிலங்களில் இருந்தும் சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர். இதனால், திருக்கழுக்குன்றம் விழாக்கோலம் பூண்டது. போக்குவரத்து, குடிநீர், தங்குமிடம், கழிப்பறை, வாகன நிறுத்துமிடம் போன்ற பல்வேறு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது.

90 மருத்துவர்கள் உள்பட 400 மருத்துவ பணியாளர்கள் அடங்கிய மருத்துவக் குழுக்கள், 40 தீயணைப்பு வீரர்களைக் கொண்ட அவசரகால குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தன. திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 2 ஆயிரம் போலீஸார், மாவட்ட எஸ்பி முத்தரசி தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x