

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்த மன உறுதி போன்ற குணங்களை தான் சசிகலாவிடம் உணர்வதாக அமைச்சர் நிலோபர் கபீல் தெரிவித்துள்ளார்.
சசிகலா முதல்வராக வேண்டும் என்பதில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் உறுதியாக உள்ளனர். எனவே, அவர் அரசு அமைப்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்று தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் கூறியுள்ளார்.
அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கட்டாயப்படுத்தி கூவத்தூரிலுள்ள சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டு பல்வேறு தரப்பிலிருந்து வந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக அதிமுக பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா, கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் எம்எல்ஏக்களை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.
இது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் 'தி இந்து'விடம் (ஆங்கிலம்) தொலைபேசி வாயிலாக கூறும்போது, "அதிமுகவின் 127 எம்எல்ஏக்கள் உறுதியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கிறோம். விரைவில் ஆட்சி அமைக்கப்படும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
சனிக்கிழமை அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா எங்களுடன் நடத்திய ஆலோசனையின்போது, அவரது பேச்சில் புத்துணர்ச்சியும், ஆற்றலும் நிறைந்திருந்தது. சசிகலாவின் பேச்சு எங்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. விரைவில் அரசு அமைக்கப்படும் என்று சசிகலா உறுதியளித்துள்ளார்.
சசிகலா, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவைப் போல் மனஉறுதியுடன் இருக்கிறார். ஜெயலலிதாவிடமிருந்த குணங்களை நான் சசிகலாவிடம் உணர்கிறேன்"
முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்துள்ள எம்பிக்கள் குறித்து கேட்டதற்கு, "அரசு அமைந்ததும் பெரும்பாலானவர்கள் மீண்டும் இங்கு வந்துவிடுவார்கள். அவர்களால் வேறு எங்கு செல்ல முடியும்? அவர்கள் இங்குதான் திரும்ப வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.
மேலும், கூவத்தூரிலுள்ள சொகுசு விடுதியில் எம்எல்ஏக்கள் கட்டாயப்படுத்தி தங்கவைக்கப்பட்டுள்ளார்களா? எனக் கேட்டதற்கு, "எம்எல்ஏக்கள் யாரும் இங்கு கட்டாயப்படுத்தி தங்க வைக்கப்படவில்லை. எங்களது குடும்ப உறுப்பினர்கள் எங்களைச் சந்திக்க வருகின்றனர். நான் என்னுடைய மகளுக்காக காத்திருக்கிறேன். இங்கு அழகான நீச்சல் குளம் உள்ளது" என்று கூறினார்