புதன்கிழமை சட்டப்பேரவை கூடுகிறது: முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

புதன்கிழமை சட்டப்பேரவை கூடுகிறது: முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
Updated on
1 min read

மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்காக புதன்கிழமை சட்டப்பேரவை கூடுகிறது. இந்தக் கூட்டத்தொடரில் நீட் தேர்வு மற்றும் ஜி.எஸ்.டி. விவகாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஓபிஎஸ் அணிக்கு செல்லாமல் தடுக்க எம்எல்ஏக்களுக்கு கோடிக்கணக்கில் பேரம் பேசப்பட்டதாக மதுரை மேற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் பேசும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், தனியார் தொலைக்காட்சியில் வெளியான வீடியோவில் உள்ளது நான்தான் ஆனால் அதில் ஒலிக்கும் குரல் என்னுடையது அல்ல என்று மதுரை தெற்கு எம்.எல்.ஏ. சரவணன் கூறினார். இருப்பினும் இந்தப் புகார் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி திமுக உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.

தற்போதைய சூழலில் ஓபிஎஸ் தரப்பில் 11 எம்எல்ஏக்கள் உள்ளனர். தினகரனுக்கு ஆதரவாக 32 பேர் உள்ளனர். மீதமுள்ளவர்கள் முதல்வர் கே.பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர். ஆட்சிக்கு பாதிப்பில்லை என இவர்கள் தெரிவித்தாலும், சட்டப்பேரவையில் எடுக்கப்படும் முடிவுகள் பொறுத்துதான், எம்எல்ஏக்களின் அடுத்த கட்ட செயல்பாடுகள் இருக்கும்.

இந்நிலையில் புதன்கிழமை சட்டப்பேரவை கூடுகிறது. பேரவைக் கூட்டம் ஜூன் 14-ம் தேதி முதல் ஜூலை 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதில் நீட் தேர்வு மற்றும் ஜி.எஸ்.டி. விவகாரம், தமிழக சட்டப்பேரவையில் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்களிக்க எம்.எல்.ஏ.க்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் பிரச்சினை, இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு விதித்துள்ள தடை மீது தமிழ்நாட்டின் நிலைப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in