திருவள்ளூர் மற்றும் சென்னையின் பல்வேறு இடங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேர் கைது: 65 பவுன் நகை, 2 கார்கள் பறிமுதல்

திருவள்ளூர் மற்றும் சென்னையின் பல்வேறு இடங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேர் கைது: 65 பவுன் நகை, 2 கார்கள் பறிமுதல்
Updated on
1 min read

திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களின் பல்வேறு இடங் களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் சமீபகாலமாக ஒரு கும்பல், கார் மூலம் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக சென்னை மாநகர காவல்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த கும்பலை பிடிக்க ஆவடி குற்றப்பிரிவு ஆய்வாளர் முருகேசன் தலைமையில் அமைக்கப்பட்ட தனி படைக்கு நேற்று முன்தினம் ஒரு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் தனிப் படை போலீஸார், நேற்று முன்தினம் மாலை, ஆவடி- பருத்திப்பட்டு சோதனைச் சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மடக்கிப் பிடித்து அதில் வந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், 3 பேரும் சென்னை- கொளத்தூர் மாதவன்(48), கேரளா-பாலக்காடு ஜாகீர்உசேன்(42), எண்ணூர் ராஜமாணிக்கம்(32) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்கள் ஆவடி, ஆவடி டேங்க் பேக்டரி, திருமுல்லைவாயில், மாதவரம், புழல் ஆகிய திருவள்ளூர் மாவட்டப் பகுதிகள், சைதாப்பேட்டை, திருவிக நகர், பெரவள்ளூர், செம்பியம், கொடுங்கையூர் ஆகிய சென்னை மாவட்டப் பகுதிகளில் கார் உதவியுடன் வீடுகளில் கொள்ளை யடித்து வந்தது தெரியவந்தது.

மாதவன் மீது மத்திய குற்றப்பிரிவில் பல வழக்குகளும், ஜாகீர் உசேன் மீது சத்தியமங்கலம், கோவை ஆர்.எஸ்.புரம், பல்லடம், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் கொலை வழக்கு மற்றும் கார் திருட்டு, வழிப்பறி, சந்தன கட்டை கடத்திய வழக்குகள் என 17-க்கும் மேற்பட்ட வழக்குகளும், ராஜமாணிக்கம் மீது மாதவரம் பால்பண்ணை, எண்ணூர் பகுதி களில் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகளும் உள்ளது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

3 பேரையும் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர் ஆவடி போலீஸார், அவர்களிடம் இருந்து 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 65 பவுன் நகை, 2 கார்கள் மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 3 பேரும் நேற்று பூந்தமல்லி ஜெ.எம்-2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in