Published : 29 Jun 2017 08:47 AM
Last Updated : 29 Jun 2017 08:47 AM

டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் ஒப்பாரி போராட்டம்

ஆலந்தூர் அருகே மூவரசம்பேட்டையில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதல்வர் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் அகற்றப் பட்டன. இதில் ஆதம்பாக்கம் பகுதியில் இருந்த (4028) கடையும் அடங்கும். ஆனால் அகற்றப்பட்ட டாஸ்மாக் கடையை மூவரசம்பேட்டை உழைப்பாளர் நகரில் டாஸ்மாக் நிர்வாகம் அமைத்தது. அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.

கடையை மூடுவதாகத் தெரிவித்த டாஸ்மாக் நிர்வாகம் கடையை மூடவில்லை. பல இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுவிட்டதால் இந்தக் கடைக்கு மது குடிக்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகியது.

இதனால் அந்தப் பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அவ்வப்போது பிரச்சினைகள் எழுந்தன.

இதனால் அப் பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்நிலையில் கடையை மூட வலியுறுத்தி நேற்று ஏராளமான பெண்கள் ஒப்பாரி வைத்து நூதன போராட்டம் நடத்தினர். அதன் காரணமாக கடை நேற்று திறக்கப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x