Published : 26 Aug 2015 08:09 AM
Last Updated : 26 Aug 2015 08:09 AM

வீட்டு பணிப் பெண்களுக்கு 1 மணி நேரத்துக்கு தலா ரூ.50 ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்: தேசிய வீட்டு வேலை தொழிலாளர்கள் இயக்கம் கோரிக்கை

வீட்டு பணிப் பெண்களுக்கு 1 மணி நேரத்துக்கு தலா ரூ.50 என ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் என்று தேசிய வீட்டு வேலை தொழிலாளர்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

வீட்டு பணிப் பெண்களுக்கான தேசிய கொள்கை ஒன்றை மத்திய அரசு தயாரித்துள்ளது. அதில் வீட்டு வேலைக்காக அமர்த்தப்படும் பெண் களுக்கு மாதம் ரூ.9 ஆயிரம் ஊதியம், அவர்களுக்கு சமூக பாது காப்பு அளிப்பது, ஆண்டுக்கு 15 நாள் ஊதியத்துடன் விடுப்பு உள்ளிட்ட பல்வேறு பலன்கள் கட்டாய மாக்கப்பட்டுள்ளன.

தொழிலாளர் நலத்துறை தலைமை இயக்குநர் இறுதி செய்த இந்த தேசிய கொள்கை, அண்மையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்திடம் வழங்கப் பட்டுள்ளது.

மேலும் சென்னையைச் சேர்ந்த தேசிய வீட்டு வேலை தொழிலாளர்கள் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், ‘‘தமிழக அரசு கடந்த 2009-ல் வீட்டு பணிப் பெண் களுக்கான ஊதியத்தை நிர்ணயிக்க ஆலோசனைக் குழு ஒன்றை அமைத்தது. அக்குழுவானது, பணி செய்யும் நகரங்களுக்கேற்ப ஒரு மணி நேரத்துக்கு தலா ரூ.25 முதல் ரூ.30 வரை ஊதியமாக நிர்ண யிக்கலாம் என்று பரிந்துரை செய்து, அறிக்கையை அரசிடம் அளித்தது. இந்த பரிந்துரையை அரசு செயல் படுத்த வேண்டும்’’ என்று கோரப் பட்டிருந்தது.

இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட அமர்வு, இந்த மனு தொடர்பாக தமிழக அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் உத்தர விட்டிருந்தது.

இது தொடர்பாக தேசிய வீட்டு வேலை தொழிலாளர் இயக்கத்தின் தலைவி எம்.வளர்மதி சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு, வீட்டு பணி பெண் களுக்கென தேசிய கொள்கை ஒன்றை உருவாக்கி, குறைந்தபட்ச ஊதிய மாக மாதம் ரூ.9 ஆயிரம் நிர்ண யித்திருப்பதை வரவேற்கிறோம்.

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு வீட்டு பணிப் பெண்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் விலைவாசி பன்மடங்கு உயர்ந்துள்ளது. மேலும் அனைத்து பெண்களும் முழு நேர பணியில் ஈடுபடுவதில்லை. வீட்டின் உரிமையாளர்கள் அனைவரும் முழு நேர பணியாளர்களை வைத்துக் கொள்வதில்லை. அதனால் 1 மணி நேரத்துக்கு தலா ரூ.50 என ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் வீட்டு வரியாக கிடைக்கும் தொகையில் இருந்து வீட்டு பணிப் பெண்களுக்கான நலவாரியத் துக்கு நிதி ஒதுக்க வேண்டும். வீட்டு பணியில் 100 சதவீதம் பெண் களே ஈடுபடுகின்றனர். அதனால் அப்பெண்களுக்கான புகார் மையத்தை அரசு ஏற்படுத்த வேண் டும். முதலாளி- தொழிலாளி கட்டாயப் பதிவை அரசு ஏற்படுத்த வேண்டும். இத்தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரத் துக்கு குறையாமல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். இவர்களின் ஓய்வு வயதை 55 ஆக குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நீலா, வீட்டு பணிப் பெண், திருவான்மியூர்.

நான் எட்டாவது வரைக்கும் படிச்சி ருக்கேன். என்னோட கணவர் 4 வருசத்துக்கு முந்தி, டி.பி. வந்து இறந்துட்டாரு. காயலாங்கடையில வேலை பாத்தாரு. அவரு இருந்த வரைக்கும் எனக்கு கஷ்டம் ஏதுமில்லே. எனக்கு ரெண்டு பொண்ணுக, ஒரு பையன்.வீட்டு வாடகை, சாப்பாடு, பிள்ளைக படிப்புன்னு என்னால சமாளிக்க முடியலே. மூணு வருசமா வீட்டு வேலைகள் செய்யிறேன். இப்ப மூவாயிரம் தர்றாங்க.

காலையில ஆறு மணிக்கெல்லாம் வேலைக்கிப் போயிரணும். சாமான் களைக் கழுவுறது, துணி துவைக்கிறது, வீட்டைப் பெருக்கித் தினமும் தண்ணி விட்டுத் துடைக்கிறதுன்னு மூணு மணி நேரமாகும். பெரியவங்க துணிய மட்டுந்தான் மிஷின்ல போடுவாங்க. குழந்தைகளோட ஸ்கூலு டிரஸ்ஸை கையாலத்தான் துவைக்கணும்.

என்னோட பெரிய பொண்ணுக்கு கல்யாணத்தை முடிச்சிட்டேன். ரெண் டாவது பொண்ணு காலேஜ்ல படிக்கிறா. வட்டிக்கு வாங்கித்தான் படிக்க வைக்கிறேன். பையன் +2 வரைக்கும் படிச்சான். அதுக்குப் பிறகு படிக்கலே. எங்களுக்கு ரூ.9 ஆயிரம் ஊதியம் கொடுக்க அறிவுறுத்தரது, நீங்க சொல்லித்தான் எனக்குத் தெரியும். மத்திய அரசு சொல்லியிருக்கிற மாதிரி எங்க ளுக்குச் சம்பளம் கிடைச்சா, கஷ்ட மில்லாம எம்புள்ளைகளை கரை யேத்திடுவேன்.

எஸ்.புஷ்பா, வீட்டு பணிப் பெண், தியாகராயநகர்

நான் பல ஆண்டுகளாக வீட்டுப் பணியில் ஈடுபட்டு வருகிறேன். வீட்டின் உரிமையாளர் எங்களுக்கு ஓய்வே வழங்காமல் தொடர்ந்து பணி களை வழங்கிக் கொண்டே இருப் பார். அவ்வளவு பணிகளைச் செய்தும் எங்களுக்கு மாதத்துக்கு ரூ.3 ஆயிரம் வரைதான் ஊதியம் கிடைக்கும். இந்த வருமானத்தை வைத்துக்கொண்டு, தற்போதுள்ள சூழ்நிலையில் குடும்பம் நடத்தவே முடியாது. எங்கள் குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்து வருகின்றனர். அதற்கேற்றவாறு செல வும் கூடுகிறது. ஆனால் எனது ஊதியம் உயரவில்லை. மேலும் துணி துவைக்கவும், பாத்திரங்களை கழுவ வும் பயன்படுத்தப்படும் சோப்பு மற்றும் பவுடர்களால் பல்வேறு தோல் பிரச்சி னைகள் வருகின்றன. இதற்கு எங்க ளுக்கு கிடைக்கும் ஊதியத் தில்தான் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

வீட்டின் உரிமையாளர் ஒருபோதும் சிகிச்சை செலவை ஏற்க மாட்டார். அதனால் எங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு தலா ரூ.50 என்ற வகையிலாவது ஊதியத்தை மத்திய, மாநில அரசுகள் நிர்ணயம் செய்ய வேண்டும்.

சுப்புலட்சுமி, தேசிய வீட்டுவேலை தொழிலாளர்கள் சங்க திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்:

மாதம் ரூ.9 ஆயிரம் என்று நிர்ணயித்திருப்பது போதுமானதல்ல. தற்போதுள்ள விலைவாசி உயர் வில் இந்த தொகையை கொண்டு வீட்டுவேலை செய்வோர் எப்படி பிழைக்க முடியும்? அரிசி விலை, மளிகை பொருட்கள் விலை, மின் கட்டண உயர்வுகள் எல்லாவற்றையும் நாங்களும் சமாளிக்க வேண்டியி ருக்கிறது. தற்போது சித்தாளுக்கு கூட நாளொன்றுக்கு ரூ.400 ஊதியம் கிடைக்கிறது. மதியம் உணவு இடை வேளை விடப்படுகிறது. ஓய்வெடுக் கவும் முடிகிறது. ஆனால் வீட்டு பணிப் பெண்கள் மதிய வேளையில் ஓய்வெடுக்க வீட்டின் உரிமையாளர்கள் அனுமதிப்பதில்லை. சாப்பிடக் கூட முடியாத அளவுக்கு வேலைகளை திணிப்பார்கள். அதனால் வீட்டு பணிப் பெண்களுக்கான மாத ஊதியம் ரூ.15 ஆயிரமாக நிர்ணயிக்க வேண்டும் என்றார் அவர்.

கே.வாசுகி, வீட்டு உரிமையாளர், ஆவடி:

பெரும்பாலான வீடுகளில் பாத்திரம் கழுவுதல், வீடு சுத்தம் செய்தல் மற்றும் துணி துவைப்பது என குறிப்பிட்ட சில வேலைக்கு மட்டுமே தொழிலாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதுபோன்ற வேலைகள் செய்ய ரூ.9 ஆயிரம் ஊதியம் என்பதை ஏற்க முடியாது. வீட்டில் முழு நேரம் தங்கியிருந்து வேலை செய்பவர்களுக்கு அதிக பட்சமாக ரூ.6 ஆயிரம் வரை வழங்க லாம். காரணம், பொறியியல் படித்த மாணவர்களுக்கே ரூ.7 ஆயிரம்தான் ஊதியம் வழங்கப்படுகிறது. இன்றைய நிலையில் வீட்டு வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது. இந்நிலையில் ரூ.9 ஆயிரம் மாத ஊதியம் என்பது வீட்டு உரிமையாளர்களுக்கும் சரி, பணி யாளர்களுக்கும் சரி எவ்வித நன்மையையும் ஏற்படுத்தாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x