

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பறக்கும் படையினருக்காக வாடகைக்கு வாகனங்களை இயக்கியவர்களுக்கு, தேர்தல் முடிந்து 2 மாதங்களுக்கு மேலாகியும் அதற்கான தொகை வழங்கப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலின்போது விதிமீறல்களைக் கண்காணித்து அவற்றைத் தடுக்கும் வகையில், பறக்கும் படைகள், நிலை கண்காணிப்புக் குழுக்கள், மண்டல அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டன. வருவாய்த் துறையினருடன், போலீஸார் மற்றும் துணை ராணுவத்தினரும் இப்பணியில் ஈடுபட்டனர்.
மேலும், தேர்தல் பொதுப் பார்வையாளர்கள், தேர்தல் செலவினக் கண்காணிப்பு பார்வையாளர்கள், தேர்தல் நுண் பார்வையாளர்களும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கும் முதல்கட்டமாக பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக் குழுக்கள், மண்டலக் குழுக்கள் என மொத்தம் 99 குழுக்கள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து புகார்கள் வந்ததால், கூடுதலாக 215 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன.
வாடகை வாகனங்கள்…
தேர்தல் ஆணைய உத்தரவின்பேரில், பறக்கும் படை உள்ளிட்ட கண்காணிப்புக் குழுக்கள் அதிக அளவில் ஏற்படுத்தப்பட்டதால் அவர்கள் ரோந்து செல்ல போதிய அரசு வாகனங்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து, வாடகைக்கு வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
நாள் வாடகை ரூ.1,250, ஓட்டுநர் படி ரூ.700 என ஒரு நாளைக்கு மொத்தம் ரூ.1,950 அளிப்பதாகவும், உணவுச் செலவை தனியே அளிப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் அப்போது உறுதி அளிக்கப்பட்டதாம். ஆனால், தேர்தல் முடிந்து 2 மாதங்களுக்கு மேலாகியும், வாகனங்களுக்கான வாடகைத் தொகை அளிக்கப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக, திருச்சி ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க நேற்று முன்தினம் வந்த, வாடகை வாகன உரிமையாளர்கள் கூறும்போது, “சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மே 11-ம் தேதி முதல் மே 17-ம் தேதி வரை, தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்களுக்கு 350-க்கும் அதிகமான வாகனங்களை வாடகைக்கு ஓட்டினோம்.
அதிகாரிகளுடன் இணைந்து நேரம் காலம் பார்க்காமல் வேலைசெய்தோம். ஆனால், இதுவரை எங்கள் வாகனங்களுக்குரிய வாடகைத் தொகையை மாவட்ட நிர்வாகம் வழங்கவில்லை. போட்டிகள் நிறைந்த வாடகை வாகனத் தொழிலில், 7 நாட்களுக்கான தொகையை தராமல் அலைக்கழிக்கப்படுவதால், பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளோம்” என்றனர்.
தேர்தல் வட்டாட்சியர் அலுவலக வட்டாரங்கள் கூறியதாவது: தேர்தல் பணியில் ஈடுபட்ட வாகனங்களுக்கு அளிக்க வேண்டிய தொகையை அரசிடம் கேட்டுள்ளோம்.
நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் முடிந்த பிறகு நிதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். அரசிடம் இருந்து நிதி வந்த பிறகு வாகன உரிமையாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படும் என்றனர்.