புதுச்சேரியில் மக்களுக்காக திறந்தது கவர்னர் மாளிகை கதவு

புதுச்சேரியில் மக்களுக்காக திறந்தது கவர்னர் மாளிகை கதவு
Updated on
1 min read

புதுச்சேரி புதிய துணைநிலை ஆளுநராக கிரண்பேடி கடந்த ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். புதிய பொறுப்புக்கு வந்தது முதல் அவர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக ஊழல், முறைகேடுகள், சமுக விரோத செயல்கள் குறித்து பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க ஏதுவாக 1031 என்ற இலவச தொலைபேசி எண்ணை ஒரு வார காலத்தில் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவித்திருக்கிறார்.

அதோடு, அனைத்து அரசுத் துறைகளை சேர்ந்த அதிகாரிகள் நாள்தோறும் மாலை 5 மணி முதல் 6 மணிவரை கட்டாயமாக தங்களுடைய அலுவலகங்களில் இருக்க வேண்டும். அந்த நேரம் முழுவதும் துறை சார்ந்து பொதுமக்கள் அளிக்கும் புகார்கள், குறைகளை கேட்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

அதே போல தன்னையும் ராஜ்நிவாசில் (துணைநிலை ஆளுநர் மாளிகையில்) மாலை 5 மணி முதல் 6 மணி வரை பொதுமக்கள் எந்தவித அனுமதியும் இன்றி எளிதாக சந்தித்து புகார்கள், குறைகளை கூறலாம் எனத் தெரிவித்திருந்தார். 'இது எந்த அளவுக்கு நடைமுறை சாத்தியம்?' என்று சிலரால் முனுமுனுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முதன்முறையாக துணைநிலை ஆளுநர் மாளிகையில் பொதுமக்கள் எந்தவித அனுமதியும் இன்றி எளிதாக சென்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை அவரது அறையில் சந்தித்து தங்களின் நிறைகுறைகளை எடுத்து கூறினர்.

அப்போது, ஒரு தம்பதி தன்னுடைய குழந்தையை அழைத்துக் கொண்டு வந்து, குறிப்பிட்ட தனியார் பள்ளியில் சேர்க்கை அனுமதி பெற்றுத்தரும்படி கேட்டனர். அதற்கு கிரண்பேடி, 'தனியார் பள்ளிகளைக் காட்டிலும் அரசு பள்ளிகளில் நிறைய நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அதில் படிக்க வையுங்கள்' என்று சொல்லி, அந்த குழந்தையை பக்கத்தில் இருக்கையில் அமர வைத்து பேசினார். மேலும் ஆளுநர் மாளிகை சார்பாக அந்தக் குழந்தைக்கு பழக்கூடை ஒன்றும் பரிசளிக்கப்பட்டது.

மோதிலால்நேரு அரசு தொழில்நுட்ப கல்லூரியில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற ஊழியர் அப்துல்காதி என்பவர் வந்து கிரண்பேடியை சந்தித்தார். 'எனக்கு 2001 ஆம் ஆண்டு முதல் உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. கடந்த 15 வருடங்களாக இதைக்கேட்டு அலைகிறேன்.'' என்றார். அவரது மனுவை வாங்கி படித்த பேடி, உடனே தனது லெட்டர் பேடை எடுத்து, அதில் குறிப்பெழுதி, 'இதைக் கொண்டு போய் கல்வித்துறை ஓய்வூதியப் பிரிவில் கொடுங்க.' என்று கொடுத்தார். அப்துல் முகம் முழுக்க மலர்ச்சியோடு சென்றார்.

அப்போது புதுச்சேரிக்கு கல்வி சுற்றுலா வந்த புனேவைச் சேர்ந்த மாணவர்கள் ஆளுநர் கிரண்பேடியை எளிதாக வந்து சந்தித்தனர். அதில் சில மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வுக்கு படித்து வருவதால் அது தொடர்பான ஆலோசனைகளை பேடியிடம் கேட்டறிந்து சென்றனர்.

இப்படி முதல் நாளிலேயே எந்த ஒரு முன் அனுமதியும் இல்லாமல் துணைநிலை ஆளுநரை எளிய மக்கள் சந்தித்தது நேற்று புதுச்சேரி பரபரப்பாக பேசப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in