

பல்லாவரம் அடுத்த திருமுடிவாக்கத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று வாசகர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ‘தி இந்து’ உங்கள் குரலில் வாசகர் ஆர்.கண்ணன் கூறியதாவது:
“திருமுடிவாக்கம் ஊராட்சியில் பழந்தண்டலம், திருமுடிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். திருமுடிவாக்கத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் இல்லை. இதனால் நோயாளி களுக்கு தேவைப்படும் அவசர சிகிச்சை அளிக்கக் கூட வழியில்லாமல் அவதிப்படும் நிலை உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்தால், இங்கு வசிக்கும் மக்கள் பயன்பெறுவார்கள்” என்றார்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “மக்கள் தொகைக்கு ஏற்ப ஒவ்வொரு பகுதியிலும் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. திருமுடிவாக்கத்தில் உள்ள மக்கள் முறைப்படி சுகாதாரத் துறைக்கு கடிதம் கொடுத்தால், அங்கு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும்” என்றனர்