Published : 11 Oct 2014 10:30 AM
Last Updated : 11 Oct 2014 10:30 AM

காதலித்து கலப்புத் திருமணம்: மனைவி கவுரவக் கொலை செய்யப்பட்டதாக கணவர் வழக்கு

ஜாதி மாறி காதல் திருமணம் செய்து கொண்டதால் தனது மனைவியை கவுரவக் கொலை செய்துவிட்டனர் எனக் கூறி அவரது கணவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக உசிலம்பட்டி அருகேயுள்ள பொலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பி.திலிப்குமார் மனு தாக்கல் செய்துள்ளார்.

நான் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்தவன். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த விமலா தேவியும் நானும் 2 ஆண்டுகளாக காதலித்தோம். இருவரும் 22.7.2014 அன்று திருமணம் செய்து கொண்டோம். பின்னர் கேரள மாநிலம், பாலக்காட்டுக்கு சென்றுவிட்டோம்.

இதற்கிடையே உசிலம்பட்டி காவல் நிலையத்தில் விமலாவின் தந்தை புகார் அளித்துள்ளார். அதனையடுத்து பாலக்காட்டுக்கு வந்த உசிலம்பட்டி போலீஸார், விசாரணைக்காக எனக்கூறி எங்களை ஜூலை 25-ம் தேதி உசிலம்பட்டிக்கு அழைத்துச் சென்றனர்.

தன்னுடைய பெற்றோருடன் செல்ல விரும்பவில்லை என்றும், என்னுடனேயே வாழ விரும்புவதாகவும் காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் விமலா உறுதிபடத் தெரிவித்தார். எனினும் எங்களது வேண்டுகோளை ஏற்காத காவல் துறையினர் எங்கள் இருவரையும் பிரித்துவிட்டனர். அவரது பெற்றோரும், காவல் துறையினரும் எனது மனைவியை மிக மோசமான வார்த்தைகளால் திட்டியதோடு, அவரை அடித்து மிரட்டியுள்ளனர். எம்.எல்.ஏ. ஒருவரும், அவரது ஆட்களும் வந்து காவல் நிலையத்துக்கு அருகிலேயே கட்டப் பஞ்சாயத்து நடத்தியுள்ளனர். எனது மனைவியின் கழுத்திலிருந்து நான் கட்டியிருந்த தாலியை வலுக்கட்டாயமாக அகற்றியுள்ளனர்.

பின்னர் மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் எனது மனைவி ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கடுமையாக அச்சுறுத்தப்பட்டிருந்ததால் பெற்றோருடன் செல்ல விரும்புவதாக அங்கு எனது மனைவி கூறியுள்ளார்.

அதன் பிறகு தனது பெற்றோர் வீட்டுக்கு எனது மனைவி சென்றுவிட்டார். அதன் பிறகும் தொடர்ந்து என்னோடு பேசி வந்தார். அதே ஊரைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடு நடப்பதாகவும், எனினும் எப்படியும் தப்பி வந்துவிடுவதாகவும் எனது மனைவி தெரிவித்தார்.

இந்நிலையில் செப்டம்பர் 23-ம் தேதி வத்தலக்குண்டு வருவதாகவும், அங்கு வந்து தன்னை அழைத்துச் சென்றுவிடுமாறும் என்னிடம் எனது மனைவி தெரிவித்தார். அதன்படியே அன்றைய தினம் நான் வத்தலகுண்டு சென்றேன். எனினும், விமலாவின் உறவினர்கள் எங்கள் இருவரையும் பிடித்து வத்தலகுண்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு பெண் எஸ்.ஐ. எங்களிடம் விசாரணை நடத்தினார். பெற்றோருடன் செல்ல முடியாது என விமலா உறுதியாகக் கூறிவிட்டதால் மதுரையில் உள்ள அரசு காப்பகத்துக்கு எனது மனைவியை எஸ்.ஐ. அழைத்துச் சென்றார்.

எனினும் அதன் பிறகு விமலாவை அவரது பெற்றோரிடம் எஸ்.ஐ. ஒப்படைத்து விட்டதாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி இரவு மர்மமான முறையில் எனது மனைவி இறந்துவிட்டார். எனது மனைவியின் உடலை அவரது பெற்றோரும், உறவினர்களும் எரித்துவிட்டனர்.

ஜாதி மாறி காதல் திருமணம் செய்துகொண்ட காரணத்தால் என் மனைவியை கவுரவ கொலை செய்துள்ளனர். போலீஸ் அதிகாரிகள் சிலருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்புடையதால், அவர்களை காப்பாற்றும் வகையில் தற்கொலை எனக் கூறி வழக்கை முடிக்க காவல் துறையினர் முயல்கின்றனர்.

ஆகவே, எனது மனைவி மரணம் தொடர்பாக உசிலம்பட்டி காவல் நிலையத்தில் நடந்து வரும் புலன் விசாரணைக்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும். தமிழக காவல் துறை புலன் விசாரணை நடத்தினால் இந்த வழக்கில் நியாயம் கிடைக்காது. ஆகவே, சிபிஐ புலன் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவில் திலிப்குமார் கோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் உ.நிர்மலாராணி ஆஜராகி வாதிட்டார். அப்போது, “இது தொடர்பாக அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு மீண்டும் இம்மாதம் 20-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அதுவரை உசிலம்பட்டி காவல் நிலைய போலீஸார் புலன் விசாரணை நடத்த இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது” என்று நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x