

அந்தமான் அருகே நிலவிய காற்றழுத்த தாழ்வுநிலை நகர்வால் தமிழகத்தின் உள் பகுதியில் வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வேலூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கோவை, திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை ஆகிய பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் அளவில் பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் தற்போது, குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுகிறது. அடுத்த வரும் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். இது தமிழகத்தை நோக்கி வராமல் விலகிச் செல்லும் நிலையில், அடுத்து வரும் 3 நாட்களுக்கு தமிழகத்தின் உள் பகுதிகளில், வெப்பநிலை இயல்பை விட உயர்ந்து காணப்படும். ஓரிரு இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டம் தாளவாடி, நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது என்றார்.
தமிழ் வானிலை சொல் கையேடு வெளியீடு
வானிலை ஆய்வு இயக்குநர் பாலசந்திரன் மேலும் கூறும்போது, “வானிலை மையத்தோடு இணைந்து செயல்படும் இந்திய ரயில்வே, மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு துறைகள் பங்கேற்கும் கருத்தரங்கம், சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மற்றும் குடும்பநல பயிற்சி மையத்தில் வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது. அதில் இந்திய வானிலை மையத்தின் இயக்குநர் ஜெனரல் கே.ஜெ.ரமேஷ் கலந்துகொள்கிறார். இந்த கருத்தரங்கில், சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தயாரிக்கப்பட்ட, வானிலை சொற்களுக்கான தமிழ் சொற்கள் அடங்கிய கையேடு வெளியிடப்பட உள்ளது” என்றார்.