

வனத்தை ஒட்டியுள்ள விவசாய நிலங்களை சுற்றுப்புற சூழியல் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வர வனத்துறையின் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தமிழகத்தில் காடுகள் அழிந்து போகாமல் இருக்கவும், இயற்கையை பாதுகாக்கவும் கடந்த 1949-ம் ஆண்டு தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது. அப்போது குமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை வட்டம் ஆகியவை கேரளாவோடு இருந்ததால், இங்கு அந்த சட்டம் நடைமுறையில் இல்லை.
காலப்போக்கில் இவ்விரு பகுதிகளும் தமிழகத்தோடு இணைந்துவிட, கடந்த 1979-ம் ஆண்டு அங்கும் இச்சட்டம் அமலானது. கடந்த 2010 ஆகஸ்ட் 10-ம் தேதி அப்போதைய கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னு, தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.
இச்சட்டத்தால் குறிப்பிட்ட கால இடைவெளியில் ரப்பர் மரங்களை முறித்து விட்டு, மறுநடவு செய்ய அனுமதி பெற வேண்டியிருந்தது. சொத்துக்களை விற்கவோ, வாங்கவோ முடியாது. இதை எதிர்த்து 4 ஆண்டுகளாக மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மாவட்டத்தின் வனத்தை ஒட்டிய பகுதிகளை சுற்றுப்புற சூழியல் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வருவதற்காக, வனத்துறையினர் அளவெடுக்கும் பணியை மேற்கொண்டு உள்ளனர்.
விவசாயிகள் அதிர்ச்சி
கன்னியாகுமரி மாவட்ட ரப்பர் விவசாயிகள் சங்கத் தலைவர் எஸ்.நெல்சன் கூறும்போது, ‘மாவட்டத்தில் 3-ல் ஒரு பங்கு வனப் பகுதியாக உள்ளது. இந்த வனப் பகுதியில் இருந்து குறிப்பிட்ட தூரத்தில் உள்ள இடங்களையும், வன உயிரினங்களின் பாதுகாப்பு க்காக சூழழியல் உணர்ச்சி மண்டலமாக அறிவிக்க வனத்துறை மூலம் கணக்கீடு நடைபெறுகிறது. இதனால் வனத்தை ஒட்டியுள்ள விவசாயி களின் நிலம் வனத்துறை கட்டுப்பாட்டில் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதை எதிர்த்து போராட்டங்கள் நடத்த உள்ளோம்’ என்றார் அவர்.
பாதிப்பு இல்லை
வனத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, `இந்தியா முழுவதும் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் கணக்கீட்டை நடத்த மத்திய வனத்துறை உத்தரவிட்டுள்ளது. வனத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரம் அளவுக்கு மட்டும்தான் பாதுகாப்பு வளையம் அமைக்கப்படும். இதனால் விவசாய நிலங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. குவாரி உள்ளிட்டவை வனத்தை ஒட்டி அமைந்து, விலங்குகளின் வாழ்வியல் சூழலை பாதித்து விடக்கூடாது என்பதற்கே இப்பணி’ என்றார் அவர்.