Last Updated : 28 Jul, 2016 05:02 PM

 

Published : 28 Jul 2016 05:02 PM
Last Updated : 28 Jul 2016 05:02 PM

வீரபாண்டி: கழிவு மேலாண்மையின் முன்மாதிரி பேரூராட்சி!

வீரபாண்டி பேரூராட்சி நூறு சதவீத கழிவு சேகரிப்பிலும், முழுமையான மறு சுழற்சியிலும் வெற்றி அடைந்திருக்கிறது.

தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சி கழிவு மேலாண்மையில் முன்மாதிரி என்ற பெயரெடுத்திருக்கிறது. கழிவுகளை பாதுகாப்பாக அகற்றுவதிலும், மட்கிப் போகாத கழிவுகளை மறு சுழற்சிக்கு உட்படுத்துவதிலும் முன்னிலை வகித்து வருகிறது. அத்தோடு கழிவுகளில் இருந்து இயற்கை உரம் மற்றும் மண்புழு உரங்களை விவசாயிகளுக்கு தொடர்ந்து குறைந்த விலையில் வழங்கி, வேதியியல் பூச்சிக்கொல்லிகளின் பரவலையும் தடுக்கிறது.

எப்படி இது சாத்தியமானது?

வீரபாண்டி பேரூராட்சியின் முன்னாள் செயல் அலுவலர் செந்தில் குமாரின் தொடக்கம் இன்று பலனைத் தந்து வருகிறது. இப்போது பேரூராட்சி முழுவதிலும் அனைத்து வீடுகளில் இருந்தும் கழிவு சேகரிக்கப்படுகிறது. அவற்றை முறையாக அகற்றுவதாலும், மறு சுழற்சி செய்வதாலும் கழிவுகள் தேங்கிக் கிடப்பதில்லை.

இங்கு ஒவ்வொரு நாளும் 1.5 டன் மக்காத கழிவுகள் சேர்த்து சுமார் 3 டன் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. குப்பை சுத்திகரிப்புக் கிடங்கு மற்று உரக்கிடங்கு மூலம் அக்கழிவுகளை தினமும் சுமார் 500 முதல் 600 கிலோ இயற்கை மற்றும் மண்புழு உரங்களாக மாற்றுகிறது. இயற்கைக் கழிவுகள் உரங்களாகவும், மண்புழு உரங்களாகவும் மாற சுமார் 40 நாட்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிளாஸ்டிக் கழிவுகள் சிறு சிறு துண்டுகளாக்கப்படுகின்றன. ஒப்பந்ததாரர்களிடம் 1 கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்பட்டு சாலை போடப் பயன்படுத்தப்படுகின்றன. மண்புழு உரம் கிலோ 3 ரூபாய்க்கும், இயற்கை உரம் கிலோ 1 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதன் மூலம் ஊராட்சி நிர்வாகத்துக்கு வருடம் ஒரு லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கிறது. குப்பை சுத்திகரிப்புக் கிடங்கைச் சுற்றிலும் 200 மூங்கில் மரங்கள் இருப்பதால் துர்நாற்றம் எழுவதில்லை.

இதே முறையைப் பின்பற்றி அருகிலிருக்கும் தென்கரை பேரூராட்சி தினமும் 2 டன் கழிவுகளை மேலாண்மை செய்து வருகிறது. இரண்டு பேரூராட்சிகளையும் ஆய்வு செய்து திரும்பிய தேனி மாவட்ட ஆட்சியர் என். வெங்கடாச்சலம், குப்பை இல்லாத ஊராட்சியை உருவாக்குவதில் ஏராளமான உழைப்பு செலவிடப்பட்டிருக்கிறது என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x