

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப் பின் நகல் தமிழக சட்டமன்ற சபாநாயகருக்கு இன்று அனுப்பி வைக்கப்பட உள்ளதாக நீதிமன்ற வட்டாரத்தில் கூறப்படுகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கு பெங்களூர் நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஜெயலலிதா தனது சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முதல்வர் பதவியை இழந்தார்.
இதைத்தொடர்ந்து தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபால் வழக்கின் தீர்ப்பு நகலை பெற்று, தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்ட ரங்கம் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில் சபாநாயகர் மவுனமாக இருப்பதாக குற்றச் சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில் சபாநாயகர் தனபால், ஜெயலலிதா மீதான வழக்கின் தீர்ப்பு நகலை கேட்டு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத் துக்கு கடிதம் எழுதினார்.
இந்தக் கடிதத்தை புதன் கிழமை பெற்றுக்கொண்ட நீதிபதி டி'குன்ஹா, தீர்ப்பு நகலை உடனடியாக அனுப்பி வைக்குமாறு நீதிமன்ற ஊழியர் களுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து சுமார் 1200 பக்கங்கள் கொண்ட தீர்ப்பினை நகல் எடுக்கும் பணியில் நீதிமன்ற ஊழியர்கள் ஈடுபட்டனர். புதன் கிழமை மாலை வரை இப்பணி முடிவடையாததால் வியாழக் கிழமை தீர்ப்பு நகல் அனுப்பி வைக்கப்படும் என்று நீதிமன்ற ஊழியர்கள் தெரிவித்தனர்.