Published : 26 Feb 2014 12:00 AM
Last Updated : 26 Feb 2014 12:00 AM

சென்னையில் 14 இடங்களில் இ-சேவை மையங்கள்- முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

வருவாய்த்துறை, சமூகநலத் துறையின் சேவைகளை பொது மக்கள் ஒரே இடத்தில் பெறும் வகையில் சென்னையில் 14 இடங்களில் இ-சேவை மையங்களை முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

நகர்ப்புறங்களில் சொத்து வரி, மின் கட்டணம், குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றல் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகளையும் கட்டணங்களையும் பொதுமக்கள் ஒரே இடத்தில் செலுத்த வசதியாக பொது சேவை மையங்கள் தொடங்கப்படும் என்றும், சென்னை மாநகரத்தில் 10 இடங்களில் நகர்ப்புற பொது இ-சேவை மையங்கள் தொடங்கப்படும் என்றும் கடந்த 13-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, முதல்கட்டமாக சென்னை மாவட்ட நிர்வாகத் தில் உள்ள 3 தாலுகா அலுவல கங்கள், மாநகராட்சியில் 3 மண்டல அலுவலகங்கள், சென்னைக் குடிநீர் வாரியத்தின் 2 அலுவலகங்கள் மற்றும் 6 நகர்ப்புற கூட்டுறவு கடன் சங்க அலுவலகங்கள் ஆகிய 14 இடங்களில் முன்னோடி திட்டமாக நகர்ப்புற பொது இ-சேவை மையங்களை முதல்வர் ஜெய லலிதா செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.

இந்த மையங்கள் தமிழ்நாடு மின்னணு நிறுவனம், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை ஆகியவற்றின் மூலம் நிர்வகிக்கப்படும். இம்மையங்களின் மூலம் முதல்கட்டமாக குடும்பத்தில் பட்டதாரி இல்லை என்பதற்கான சான்றிதழ், கணவனால் கைவிடப் பட்டோருக்கான சான்றிதழ் மற்றும் வருமானம், சாதி, இருப்பிடச் சான்றிதழ்கள் ஆகிய வருவாய்த்துறையின் சேவை களும், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் மற்றும் பல்வேறு திருமண உதவித் திட்டங்களுக்கான சமூக நலத் துறையின் சேவைகளும் வழங்கப்படும்.

மின்மாவட்ட திட்டம் ஆரம்பம்

இரண்டாவது கட்டமாக மின் கட்டணம் செலுத்துதல், சென்னை மாநகராட்சியில் சொத்துவரி, குடிநீர் வரி செலுத்துதல் ஆகிய சேவைகளைக் கையாளவும் வழிவகை செய்யப்படும். இதன்மூலம் பொதுமக்கள் பல்வேறு அரசு அலுவலகங்களுக்குச் செல்லும் சிரமத்தைக் குறைக்க முடியும். எதிர்காலத்தில் இம்மையங்கள் மூலம் பல்வேறு அரசுத் துறைகளின் சேவைகளை இணையம் மூலமாகவே பொது மக்கள் பெற முடியும்.

பொதுமக்களுக்கு வருவாய்த் துறை மற்றும் சமூக நலத் துறையின் சேவைகளை வழங்கும் மின் மாவட்ட திட்டத்தை சென்னை மற்றும் இதர 25 மாவட்டங்களில் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்து, 4 பேருக்கு சாதிச் சான்றிதழ்களையும், 3 பேருக்கு வருமானச் சான்றிதழ்களையும் வழங்கினார்.

ஆன்லைனில் சேவை

அரசுத் துறைகளின் இணைய தளம் வாயிலான சேவைகளை பொதுமக்கள் ஒருங்கிணைந்த முறையில் பெறுவதற்கு ஏதுவாக தமிழக அரசின் பொது இ-சேவை இணைய தளத்தையும் முதல்வர் தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், தகவல் தொழில் நுட்பத் துறைச் செயலாளர் டி.கே.ராமச்சந்திரன், மின்-ஆளுமை முகமை முதன்மை செயல் அதிகாரி அதுல் ஆனந்த், தேசிய தகவலியல் மையத்தின் மாநில தகவலியல் அலுவலர் கிருஷ்ண பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x