

சென்னை கோபாலபுரத்தில் புதன்கிழமை நிருபர்களுக்கு கருணாநிதி அளித்த பேட்டி:
கே: காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா கலந்து கொள்வது பற்றி தமிழக சட்டப்பேரவையில் 2 முறை தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் தமிழர்களின் உணர்வுகளை மதிக்காமல், மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கை சென்றுள்ளாரே?
ப: அது தவறு என்பதுதான் என்னுடைய கருத்து. தமிழ் மக்களின் உணர்வுகளை இப்படியெல்லாம் மத்திய அரசு புறக்கணிக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு.
கே: காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதைக் கண்டித்து டெசோ அமைப்பின் சார்பில் போராட்டம் நடத்தப்படுமா?
ப: காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்று டெசோ அமைப்பின் சார்பில் ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீண்டும் டெசோ உறுப்பினர்களைக் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்.
கே: தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எழுப்பப்படும் வரை
காத்திருந்த தமிழக அரசு, திறப்பு விழா முடிந்த பிறகு காவல் துறையினரை விட்டு இடிக்கச் சொல்லியிருக்கிறது. அதேநேரம், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தீர்மானம் போடுகிறார்களே?
ப: இரட்டை நிலை என்பதுதான் இன்றைய அதிமுக அரசின் அணுகுமுறை. பழந்தமிழ் சின்னங்களையும், வரலாற்றுப் பதிவுகளையும் ஒழிப்பதே தங்கள் கடமை என்று கருதிச் செயல்படுகின்ற பல செயல்களில் இருந்து இதைப் புரிந்து கொள்ளலாமே? இரட்டை நிலை எடுப்பதுதான், இந்த அரசின் வழக்கமான செயல்களில் ஒன்று என்பதற்கு, பல உதாரணங்கள் உண்டு. அவற்றில் இதுவும் ஒன்று.
கே: ஏற்காடு இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்வீர்களா?
ப: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்கிறார். உடல்நிலை கருதி நான் இப்போது செல்லவில்லை.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.