

சமூக நீதிக்கான வழக்கறிஞர் பேரவையின் தலைவர் கே.பாலு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘குடிப்பழக்கம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், குடிப்பழக்கத்தை குறைப்பதற்கான வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலை அறிக்கையை ஆய்வு செய்து, அதிலுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்க குழு அமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக ஒரு குழுவை அமைக்க வேண்டும் எனவும், அந்த குழுவின் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை ஆணையர் ஆர்.கிர்லோஷ் குமார், உயர் நீதிமன்றத்தில் நிலை அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையில் கூறியிருப் பதாவது:
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை ஆணையர் தலைமையில் குழு அமைக்க கடந்த ஜூன் 30-ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்தக் குழு மதுவுக்கு அடிமை யானவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனைகளை அளிக்கும். மேலும் பல்வேறு துறைகள், வல்லுநர்களுடன் அந்தக் குழு ஆலோசித்து வருகிறது. எனவே, குழுவின் அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் ஒரு மாத அவகாசம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப் பதாவது: அரசு அமைத்துள்ள குழுவில் அதிகாரிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். மேலும், சிலர் சிறப்பு விருந்தினர்களாக குழு நடத்தும் கூட்டங்களுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அழைக்கப்படும் சிறப்பு விருந்தினர்களில் சிலர் குழுவில் இடம்பெறுவதுடன், அனைத்து கூட்டங்களிலும் பங்கேற்க வேண்டும்.
மேலும், குடிப்பழக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை இணையதளத்தில் வெளியிட வேண்டும். அப்போதுதான் பல்வேறு தரப்பினர் தங்களின் ஆலோசனைகளை வழங்க முடியும். மேலும், குழுவின் பணிகளில், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தடுப்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனவே, இதுகுறித்தும் வரும் குழு கூட்டத்தில் ஆய்வு செய்ய வேண்டும். இந்த உத்தரவை நிறை வேற்றியதற்கான அறிக்கையை நவம்பர் 25-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.