

தமிழகத்தில் உள்ள தெலுங்கு பேசும் மக்களுக்காக, சென்னையில் ஆந்திரா பவன் விரைவில் தொடங்கப்படும் என ஆளுநர் ரோசய்யா தெரிவித்துள்ளார்.
அனைத்திந்திய தெலுங்கு கூட்டமைப்பின் சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மன், திருமலை நாயக்கர் ஆகியோரை நினைவு கூரும் விழா மற்றும் ஜெய தெலுங்கு புத்தாண்டு யுகாதி விழா என முப்பெரும் விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்தது.
கூட்டமைப்பின் தலைவர் சி.என்.கே.ரெட்டி விழாவில் வரவேற்புரை ஆற்றினார். உச்சநீதி மன்ற நீதிபதி தாலமேஷ்வர், அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி, ராம்கோ குழுமத் தலைவர் ராமசுப்பிரமணிய ராஜா, சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், நல்லி குழுமத் தலைவர் நல்லிகுப்புசாமி செட்டி, ஜெயா குழுமத் தலைவர் பேராசிரியர் ஏ.கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டு தெலுங்கு மொழியின் சிறப்பு குறித்து பேசினர்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ரோசய்யா பேசியதாவது:
இந்த முப்பெரும் விழாவில், நான் கலந்து கொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. நாம் எல்லாம் கிராமத்தில் இருந்து வந்தோம். கிராமங்களில் 3, 4 தலைமுறைவரை கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தோம். இந்த கூட்டுக் குடும்ப முறை, ஒற்றுமையை உணர்த்துகிறது. இதன் அடிப்படையில் நாம் வளர்ந்தோம்.
தெலுங்கு மொழியை வீட்டிலும், குடும்பத்தாருடனும் பேச வேண்டும். பணி மற்றும் வியாபாரத்தின் காரணமாக தேவையான இடத்தில் அந்தந்த மொழிகளை பேச வேண்டும். தேசத்துக்கு தீங்கு விளைவிக்காமலும், மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காமலும் தெலுங்கு மொழியின் பெருமையை அனைவரும் கொண்டாட வேண்டும். மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை.
தமிழகத்தில் இருக்கும் தெலுங்கு மக்களுக்காக, சென்னையில் ஆந்திரா பவன் அமைப்பது பற்றி தமிழக முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. விரைவில், சென்னையில் ஆந்திரா பவன் நிறுவப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் இறுதியாக கூட்டமைபின் பொதுச்செயலாளர் எம்.எஸ்.மனோகரன் நன்றி கூறினார். இந்த விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.