

பெரம்பூர் ரயில் நிலையத்தில் திடீரென வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டதால் பயணிகளிடம் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை பெரம்பூர் மின்சார ரயில் நிலையத்துக்குள் செவ்வாய்க்கிழமை மதியம் வெடிகுண்டு நிபுணர்கள், ரயில் நிலையத்தின் பகுதிகளிலும் பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு சோதனை செய்தனர். சோதனை நடத்துவதை காவலர்களே புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, "செம்பியம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் மற்றும் செயல் இழக்க வைக்கும் பிரிவு புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
செம்பியம் காவல் நிலைய பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், வில்லிவாக்கம் முதல் வியாசர்பாடி ஜீவா வரையுள்ள ரயில் நிலைய பகுதிகளிலும் செம்பியம் வெடிகுண்டு நிபுணர்கள் திடீரென சோதனை நடத்தி பயிற்சி எடுத்து வருகின்றனர். இவர்கள் எடுக்கும் பயிற்சியின் விவரங்களை புகைப்படம் எடுத்து, காவல் ஆணையருக்கு அனுப்பி வைக்கின்றனர்.
சென்னை காவல் துறை சார்பில் புதிய காவல் ஆணையர் அலுவலகம், சென்ட்ரல், வாலாஜா சாலை, செம்பியம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் மற்றும் செயல் இழக்கவைக்கும் பிரிவுகள் செயல்படுகின்றன" என்றார்.