Published : 31 Oct 2014 03:05 PM
Last Updated : 31 Oct 2014 03:05 PM
'காக்கி சட்டை' என்னும் தலைப்பிற்கு ஒப்புதல் அளித்த நடிகர் கமல்ஹாசனுக்கும், சத்யா மூவிஸ் நிறுவனத்திற்கும் நடிகர் சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்துள்ளார்.
துரை.செந்தில்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, பிரபு உள்ளிட்டோ நடிக்கும் படத்தை தனுஷ் தயாரித்து வந்தார். முதலில் 'டாணா' என்று தலைப்பிடப்பட்டு இருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வந்தார்.
ஆனால், அதிகாரப்பூர்வமாக 'டாணா' தான் தலைப்பு என்று அறிக்கை எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத் ரசிகர்களுடைய கேள்விக்கு பதிலளிக்கும்போது படத்திற்கு 'காக்கி சட்டை' தான் தலைப்பு என்று சூசகமாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், படம் குறித்து சிவகார்த்திகேயன் அளித்த பேட்டியில் படத்தின் தலைப்பு 'காக்கி சட்டை' என்று குறிப்பிட்டு இருந்தார். தற்போது கமல் மற்றும் 'காக்கி சட்டை' பழைய படத்தை தயாரித்த சத்யா மூவிஸ் நிறுவனம் இத்தலைப்பிற்கு பச்சைக் கொடி காட்டியிருக்கிறது.
இது குறித்து சிவகார்த்திகேயன், "எனது அடுத்த படத்தின் தலைப்பு 'காக்கி சட்டை' என்பது முடிவாகி இருக்கிறது. தலைப்பிற்கு ஒப்புதல் அளித்த கமல் சார் மற்றும் சத்யா மூவிஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் இசை நவம்பரில் வெளியாகும்" என்று கூறியிருக்கிறார்.