

அஞ்சல்துறை சார்பில் தேசிய அளவில் நடைபெற்ற அஞ்சல்தலை ஓவியப் போட்டியில் கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவர் முதலிடம் பிடித்துள்ளார்.
மத்திய அஞ்சல்துறை சார்பில் கடந்த 2016, டிசம்பர் மாதம் இந்தியாவின் இயற்கை என்ற பெயரில் அஞ்சல்தலை வடிவமைப்பு போட்டி நடைபெற்றது. தேசிய அளவில் நடைபெற்ற இப்போட்டியில் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். நாட்டின் இயற்கை வளத்தை எடுத்துக்கூறும் விதமாக, ஏராளமான படைப்புகள் அதில் காட்சிப்படுத்தப்பட்டன.
அதில், சிறப்பான ஓவியமாக 6 படைப்புகள் தேர்வு செய்யப்பட்டன. அதில் இந்தியாவின் தேசிய விலங்கான புலி, தேசியப் பறவை மயில், தேசிய மலர் தாமரை ஆகியவற்றை ஒரு சேர இயற்கைச் சூழலோடு தத்ரூபமாக காட்சிப்படுத்திய ஓவியத்துக்கு முதலிடம் கிடைத்தது. கடந்த ஜன.26-ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த ஓவியங்கள் தபால்தலைகளாக வெளியிடப்பட்டன. முதலிடம் பெற்ற இந்த ஓவியத்தை வரைந்தது கோவையைச் சேர்ந்த மாணவர் எஸ்.கீர்த்திவாசன் (14) என்பது குறிப்பிடத்தக்கது. கோவை இடையர் வீதியைச் சேர்ந்த கீர்த்திவாசன், பாரதி மெட்ரிகுலேசன் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
தேசிய அளவில் முதலிடம் பிடித்த மாணவர் கீர்த்திவாசனுக்கு, கோவை ஆர்.எஸ்.புரம் தலைமை அஞ்சலகத்தில் அஞ்சல்துறை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் மேற்கு மண்டலம் அஞ்சல்துறை தலைவர் (கோவை) சாரதா சம்பத் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது மத்திய அஞ்சல்துறை வழங்கிய ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு, சான்றிதழ் உள்ளிட்டவை மாணவருக்கு பரிசாக வழங்கப்பட்டன. அத்துடன் அவரது ஓவியம் இடம் பெற்ற அஞ் சல்தலையும் வெளியிடப்பட்டது.
விளம்பரத் தூதுவர்
ஒவ்வோர் ஆண்டும் குழந்தைகள் தினத்துக்காக குழந்தைகள் வரையும் ஓவியங்களை வாங்கி, அதில் சிறந்ததைத் தேர்வு செய்து அடுத்த ஆண்டு குழந்தைகள் தினத்தில் அஞ்சல்தலைகளாக வெளியிடப்படும். இந்த ஆண்டு, சற்று புதுமையாக, குழந்தைகளை நேரடியாக ஓவியங்களை வரைய வைத்து போட்டியை நடத்தியது. அதில் கோவை மாணவர் கீர்த்திவாசன் தேசிய அளவில் முதல் இடம் பிடித்துள்ளார். இவர் வரைந்த வரைபடம் அஞ்சல்தலையாக மட்டும் வெளியாகவில்லை. நாடு முழுவதும் பொருட்களில் பயன்படுத்தும் வரைபடமாகவும் வெளியாகியுள்ளது. அதை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
தேசிய விருது பெற்ற மாணவர் கீர்த்திவாசனை அஞ்சல்தலை சேமிப்புக்கான விளம்பரத் தூதுவராகவும் நியமிக்க உள்ளோம். அஞ்சல்தலை சேமிப்பு என்பது நவீன காலத்தில் கல்வியையும் பொழுதுபோக்கையும் வழங்கக்கூடியது. அதை பள்ளி மாணவர்களிடம் கொண்டு செல்ல முழு வீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.