

பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் எண்ணூர் பொன்னேரி வழித்தடத்தில் புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை எண்ணூர் பொன் னேரி வழித்தடத்தில் ஜூன் 19-ம் தேதி முதல் ஜூலை 5-ம் தேதி வரை (வெள்ளிக்கிழமைகள் தவிர்த்து) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக, அந்த வழித்தடத்தில் செல்லும் ரயில்களின் பயண நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
பிட்ரகுண்டா சென்னை சென்ட்ரல் பயணிகள் ரயில் பொன்னேரி ரயில் நிலையத்தை 1 மணி நேரம் தாமதமாக வந்தடையும். காலை 10 மணிக்கு புறப்படும் சூலூர்பேட்டை - சென்னை மூர்மார்க்கெட் புறநகர் ரயில், 20 நிமிடங்கள் தாமதமாக அத்திப்பட்டை வந்தடையும்.
காலை 9.30 மணி மற்றும் 10.25 மணிக்கு புறப்படும் சென்னை மூர்மார்க்கெட் கும்மிடிப்பூண்டி புறநகர் ரயில் மூர்மார்க்கெட்டில் இருந்து எண்ணூர் வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோன்று காலை 9.50 மணிக்கு புறப்படும் கும்மிடிப்பூண்டி சென்னை மூர்மார்க்கெட் புறநகர் ரயில் எண்ணூரிலிருந்து சென்னை மூர்மார்க்கெட் வரை மட்டுமே இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.